லடாக் எல்லையில் ஆபரேஷன் பனிச்சிறுத்தை நடவடிக்கை தொடர்கிறது: ராணுவ கமாண்டர் தகவல்

தினகரன்  தினகரன்
லடாக் எல்லையில் ஆபரேஷன் பனிச்சிறுத்தை நடவடிக்கை தொடர்கிறது: ராணுவ கமாண்டர் தகவல்

உதாம்பூர்: ’லடாக் எல்லையில் ‘ஆபரேஷன் பனிச்சிறுத்தை’யின் நடவடிக்கை கைவிடப்படவில்லை.  நமது வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்,’ என ராணுவம் தெரிவித்துள்ளது.இந்திய-சீன எல்லையான கிழக்கு லடாக் பகுதியில் இரு நாட்டு ராணுவமும் குவிக்கப்பட்டு உள்ளதால் போர் பதற்றம் நிலவி வருகிறது. சீனாவுடன் நடத்தப்பட்ட 14வது சுற்று பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், எல்லையில் இந்திய ராணுவம் விழிப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், லடாக்கில் சீன ராணுவத்தை பின்வாங்க செய்த சிறப்பான பணியில் ஈடுபட்ட 40 வீரர்களுக்கான பாராட்டு சான்றிதழை ஜம்மு காஷ்மீர் ராணுவ தலைமையகத்தில் வழங்கி ராணுவ ஜெனரல் மற்றும் தலைமை கமாண்டர் ஜோஷி பேசியதாவது: ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களின் பாதுகாப்பு பணியில் ராணுவத்தினர் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.எல்லை கட்டுப்பாடு கோடு, அசல் எல்லைக் கட்டுப்பாடு கோடு, சர்வதேச எல்லை ஆகிய இடங்களில் இந்திய ராணுவத்தின் ஆதிக்கம் காக்கப்படுகிறது. லடாக்கின் பல இடங்களில் சீன ராணுவம் விலகி உள்ளது. மற்ற இடங்களில் இருந்து அவர்கள் விலகி செல்வதற்கான பேச்சுவார்த்தை தொடர்கிறது. இருந்தாலும், எல்லையில் பனிமூடிய பகுதிகளில் ‘ஆபரேஷன் பனிச்சிறுத்தை’ வீரர்கள் நிறுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை