12 முதல் 14 வயது சிறுவர்களுக்கு மார்ச்சில் கொரோனா தடுப்பூசி

தினகரன்  தினகரன்
12 முதல் 14 வயது சிறுவர்களுக்கு மார்ச்சில் கொரோனா தடுப்பூசி

புதுடெல்லி:  நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மேலும் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவலும் தற்போது அதிகரித்தபடியே உள்ளது. .  கடந்த 3ம் தேதி முதல் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியது. 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட 7.4 கோடி பேரில் 3.45 கோடி பேர் முதல் டோஸ் தடுப்பூசியாக கோவாக்சின் போட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலையில் 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது வருகிற மார்ச் மாதத்தில் தொடங்கப்படலாம் என்று  கொரோனா நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் என்கே அரோரா தெரிவித்துள்ளார். என்கே அரோரா கூறுகையில், ‘15 முதல் 18 வயதுகுட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி முடிக்கப்பட்டால்,  12 வயது முதல் 14வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக கொள்கை முடிவை மார்ச்சில் அரசு எடுக்கக்கூடும். 12 முதல் 14 வயதுக்குட்பட்ட பிரிவினர் சுமார் 7.5 கோடி இருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது’ என்றார். தினசரி தொற்று சற்று குறைந்தது* நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 89 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்று முன்தினம் எண்ணிக்கையை விட சற்று குறைவாகும். நேற்று முன்தினம் ஒரே நாளில் 2.71 லட்சம் பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மொத்த தொற்று எண்ணிக்கை 3.73 கோடி.* கடந்த 24 மணி நேரத்தில் 384 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4.86 லட்சம்.* சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16 லட்சத்து 56 ஆயிரத்து 341 ஆக அதிகரித்துள்ளது.* நாட்டின் மொத்த ஒமிக்ரான் வைரஸ் தொற்று எண்ணிக்கை 8,209 ஆக அதிகரித்துள்ளது. 3,109 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,738 பேரும், மேற்கு வங்கத்தில் 1,672 பேரும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை