பஞ்சாப் தேர்தல் பிப்ரவரி 20க்கு தள்ளிவைப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
பஞ்சாப் தேர்தல் பிப்ரவரி 20க்கு தள்ளிவைப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: குருரவிதாஸ் பிறந்தநாள் விழாவையொட்டி, பஞ்சாப் சட்டபேரவை தேர்தல்  அடுத்த மாதம் 20ம் தேதி  தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 117 இடங்களை கொண்ட பஞ்சாப் சட்டபேரவைக்கு பிப்ரவரி 14ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தது. பிப்.16ம் தேதி குருரவிதாஸ் பிறந்தநாள் கொண்டாடப்படுவதால்,பஞ்சாப், தலித் மக்கள் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி சென்று வழிபாடு நடத்துவர். இதற்காக அவர்கள் முன்கூட்டியே அங்கு சென்று விடுவதால் லட்சக்கணக்கானோர் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பகுஜன் சமாஜ், பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்தன. அரசியல் கட்சிகளின் இந்த கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வந்தது.இந்நிலையில், சட்டபேரவை  தேர்தல் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘குருரவிதாஸ் பிறந்தநாளையொட்டி பஞ்சாப் சட்டமன்ற தேர்தலை தள்ளி வைக்க அரசியல் கட்சிகள்  கோரிக்கை விடுத்தன. இதை ஏற்று அம்மாநிலத்தில் பிப்.14 நடக்க இருந்த தேர்தல் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை