நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும்: அமித்ஷாவிடம் தமிழக அனைத்து கட்சி குழு கோரிக்கை

தினகரன்  தினகரன்
நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும்: அமித்ஷாவிடம் தமிழக அனைத்து கட்சி குழு கோரிக்கை

புதுடெல்லி: தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று டெல்லியில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி தமிழக அரசு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக கடந்த மாதம் தமிழக ஆளுநரை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்பேரவை மசோதாவை குடியரசுத் தலைவருக்கு விரைந்து அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனைத் தொடர்ந்து முன்னதாக நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க ஒப்புதல் வழங்கக்கோரி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டாக வலியுறுத்தி இருந்தன. இந்த நிலையில் டெல்லியில் தி.மு.க. நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில், நீட் தேர்வுக்கு எதிரான தமிழக சட்டப்பேரவை மசோதாவின் நகல் மற்றும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனு ஆகியவற்றை கடந்த மாதம் 28ம் தேதி வழங்கினார்கள். இதையடுத்து அது உடனடியாக உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு, இந்த விவகாரம் குறித்து உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும் என அனைத்து கட்சி பிரதிநிதிகளுக்கும் பதில் கடிதம் அனுப்பியிருந்தது. இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக மூன்று முறை முயற்சித்தும் தமிழக எம்பிக்களை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்கவில்லை. இந்த நிலையில் நீட் விவகாரம் தொடர்பாக தமிழக அனைத்துக் கட்சி எம்பிக்களுக்கு ஜனவரி 17ம் தேதி மாலை 4.30மணிக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் தரப்பில் கடந்த 11ம் தேதி தெரிவிக்கப்பட்டிருந்தது.ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் சந்திப்பு நேர ஒதுக்கீட்டின்படி  திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழக அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று மாலை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்தனர். இதில் அதிமுக சார்பில் நவநீதகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி சார்பில் ஜெயக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி.ரவிக்குமார், பாமக தரப்பில் ஜி.கே.மணி, வைகோ(மதிமுக) , நடராஜன்(சிபி.எம்), ராமச்சந்திரன்(சிபிஐ) ஆகியோரும் ஒன்றிய அமைச்சரின் சந்திப்பின் போது உடன் சென்றனர்.இதையடுத்து டி.ஆர்.பாலு அவரது இல்லத்தில் அளித்த பேட்டியில்,‘தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை கொண்ட மனுவை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து கொடுத்துள்ளோம். இதில் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் உடன் இருந்தனர். ஏற்கனவே தமிழகத்திற்கு நீட் தேர்வு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது 03.03.2007 அன்று குடியரசுத் தலைவர் அதுகுறித்த ஒரு ஒப்புதலையும் அப்போது கொடுத்துள்ளார். அதனை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து உடனடியாக விலக்கு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம். இதையடுத்து எங்களது கோரிக்கைகளை ஒன்றிய சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை ஆகிய அமைச்சரோடு ஆலோசித்து விரைவில் தமிழக முதல்வரிடம் ஒரு நல்ல முடிவை தெரிவிப்பதாக அமித்ஷா  கூறியுள்ளார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடனான இந்த சந்திப்பு எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சந்திப்பு தவிர்க்க முடியாத காரணத்தினால் தள்ளிப்போனது குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருத்தம் தெரிவித்தார். தமிழகத்தை பொருத்தமட்டில் பொது பிரச்சைனைகளுக்காக அனைத்து கட்சிகளும் தொடர்ந்து ஒற்றுமையாக செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து எம்பி வைகோ கூறும் போது, ‘ஒடுக்கப்பட்ட மாணவர்கள் தான் நீட் தேர்வினால் பரிதாபமாக தற்கொலை செய்து கொள்கின்றனர் என்ற விவரம் அமித்ஷாவிடம் எடுத்துரைக்கப்பட்டது. அதேபோன்று குடியரசுத் தினத்தன்று நடைபெற உள்ள அலங்கார ஊர்வலகத்தில் தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதனையும் சந்திப்பின் போது அவரது கவனத்திற்கு கொண்டு சென்றோம். இவ்வாறு வைகோ கூறினார்.* தமிழகத்திற்கு வரும் 31க்குள் மழை வெள்ள நிவாரண நிதிஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவோடு நேற்று நடந்த சந்திப்பின் போது தமிழக மழை வெள்ள நிவாரண நிதி குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் மழை வெள்ள சேதம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மூன்று முக்கிய கோரிக்கைகள், மற்றும் நிவாரண தொகையாக ரூ.6,230.45 கோடி வழங்க வேண்டும் என்று அனுப்பப்பட்டுள்ள கடிதம், ஆகியவை குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த கோரிக்கையை உடனடியாக பரிசீலனை செய்துவிட்டு, இந்த மாதம் 31ம் தேதிக்குள் தமிழக மழை வெள்ள நிவாரண நிதியை அனுப்பி வைப்பதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா திமுக எம்பி.டி.ஆர்.பாலுவிடம் உறுதியளித்துள்ளார்.

மூலக்கதை