நடிகை பலாத்கார வழக்கில் புதிய திருப்பம்; 8 சாட்சிகளிடம் மீண்டும் விசாரணைக்கு அனுமதி: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
நடிகை பலாத்கார வழக்கில் புதிய திருப்பம்; 8 சாட்சிகளிடம் மீண்டும் விசாரணைக்கு அனுமதி: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவில் பிரபல நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட காட்சிகள் நடிகர் திலீப்பிடம் இருப்பதாகவும், இந்த வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி உள்பட போலீசாரை அவர் கொல்ல சதி திட்டம் தீட்டியதாகவும் ரைடக்டர் பாலசந்திரகுமார் கூறியிருந்தார். இதுதொடர்பாக எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலமும் அளித்தார்.இதையடுத்து திலீப் முன்ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையே பாலசந்திரகுமார் வெளியிட்ட தகவல்கள் குறித்து போலீசார் மீண்டும் விசாரணையை தொடங்கினர். இதையடுத்து நடிகை பலாத்கார வழக்கில் சில புதிய சாட்சிகள் உள்பட 16 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 3 பழைய சாட்சிகள் உள்பட 8 பேரிடம் விசாரணை நடத்த இன்று அனுமதி அளித்தது. மேலும் திலீப் மற்றும் இந்த வழக்கில் ைகதானவர்கள் சில முக்கிய நபருடன் போனில் பேசிய விவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று போலீசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தில் இந்த உத்தரவு திலீப் தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே நடிகர் திலீப் மற்றும் அவருக்கு நெருக்கமான 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. புதிய விசாரணை இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மூலக்கதை