ஆயிரம் சந்தேகங்கள் மத்திய தர வர்க்கத்தினருக்கு பட்ஜெட்டில் ச

தினமலர்  தினமலர்
ஆயிரம் சந்தேகங்கள் மத்திய தர வர்க்கத்தினருக்கு பட்ஜெட்டில் ச

வங்கி ஒன்றின் கிரெடிட் கார்டு வாயிலாக, விமான டிக்கெட் முன்பதிவு செய்தேன். விமான சேவை ரத்து செய்யப்பட்டது. கட்டணம் திரும்பி வந்தது. ஆனால், கார்டு நிறுவனம், 'மார்க் அப்' கட்டணம் மற்றும் அயல்நாட்டு கரன்சி பரிவர்த்தனை கட்டணம் என்ற பெயரில், இரண்டுமுறை 8,994 ரூபாய் பிடித்துக்கொண்டது. இந்திய ரூபாயில் தான் டிக்கெட் கட்டணம் சொல்லப்பட்டது. இந்நிலையில், என் கோரிக்கை மறுக்கப்பட்டது. இதை ஆர்.பி.ஐ., தீர்வாணையருக்கு எடுத்துச் சென்றிருக்கிறேன். இந்தப் பிடித்தம் சரியா?
வெங்கடேசன், மின்னஞ்சல்.
அயல்நாட்டு கரன்சி அல்லது, அயல்நாட்டு வங்கி வழியாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு இதுபோன்ற கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று, ஏற்கனவே கார்டு நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் தெரிவித்திருக்கிறது. இதற்கு ஒப்புதல் பெறப்பட்டே, உங்களுக்கு கார்டு வழங்கப்பட்டு இருக்கும். இந்திய ரூபாயில் டிக்கெட் விலையை தெரிவித்துள்ளது விமான நிறுவனம். ஆனால், வங்கிப் பரிவர்த்தனைக்கான கூடுதல் கட்டணங்கள் தனி. இதனை வெளிப்படையாக, வலைதளத்தில் தெரிவித்துள்ளது கார்டு.அதனால், தீர்வாணையர் வங்கிப் பக்கமே நிற்பார்.
கடந்த 2011ல், குறிப்பிட்ட ஒரு காப்பீட்டு பாலிசி எடுத்தேன். 2022 பிப்ரவரியில் பாலிசி முதிர்வு அடைகிறது. ஆனால் அவர்கள் தெரிவித்திருக்கும் முதிர்வு தொகை, நான் செலுத்திய பிரீமிய தொகையை விடவும் குறைவாக இருக்கிறது. முதிர்வு தொகை குறைவாக இருப்பதேன்?
பாஸ்கர், மின்னஞ்சல்.
நீங்கள் எடுத்திருப்பது 'ஹை ரிஸ்க்' பாலிசி. அதனால் பாலிசி பிரீமியத்தில், இந்த 'ரிஸ்க்' அம்சத்துக்குக் கூடுதல் தொகை பிடித்தம் செய்யப்படும். பாலிசி காலத்துக்குள் ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருந்தால், நீங்கள் செலுத்திய பாலிசி தொகையோடு, 250 மடங்கு பிரீமியம் தொகை இழப்பீடாக கிடைக்கும். இப்படி புரிந்துகொள்ளுங்கள். உங்கள் வீட்டை பாதுகாப்பதற்காக ஒரு காவல்காரரை நியமிக்கிறீர்கள். ஐந்து ஆண்டுகள் ஆகியும் எந்தத் திருட்டும் நடைபெறவில்லை என்பதற்காக, காவல்காரருக்குக் கொடுத்த சம்பளம் அத்தனையும் வீண் என்று கருதுவீர்களா?

திருடுபோகலாம் என்ற 'ரிஸ்க்'கை நீங்கள் உணர்ந்ததால் தான், காவல்காரரை நியமித்தீர்கள் என்று ஞாபகம் இருக்கட்டும். மேலும், நீங்கள் பத்தாண்டு கால பாலிசி தான் போட்டுள்ளீர்கள். 'லாயல்டி அடிஷன்ஸ்' அதிகமாக இராது. இதனால் தான் உங்கள் முதிர்வு தொகை குறைவாக இருக்கிறது.
பட்ஜெட் வரப்போகிறது வரி கட்டும் மத்திய தர வர்க்கத்தினருக்கு ஏதேனும் சலுகைகள் கிடைக்குமா?
யூ. நரசிம்மன், வத்தலகுண்டு.
இன்னும் இரண்டு வாரங்களில் என்ன வரப் போகிறது என்பது தெரிந்துவிடும். தற்போது வங்கிச் சேமிப்புக் கணக்கில் இருந்து, ஓராண்டில் பெறும் வட்டிக்கு, 10 ஆயிரம் ரூபாய் வரை வரி விலக்கு கொடுக்கப்படுகிறது. அதேபோல், வங்கி வைப்பு நிதிக்குக் கிடைக்கும் வட்டிக்கு, மூத்த குடிமக்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரையும், மற்றவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரையும் வரி விலக்கு வழங்கப்படுகிறது.

டிசம்பர் 2021 பணவீக்கம் 5.59 சதவீதத்தைத் தொட்டுவிட்டது. ஒரு பக்கம் வட்டித் தொகையோ குறைவு. சரியாக சொன்னால், முதலுக்கே மோசம். மறுபக்கம், கிடைக்கும் வட்டிக்கும் வரி செலுத்த வேண்டும். நிதி அமைச்சர் பெரிய மனசு பண்ணி, இந்த வரி விலக்கு வரையறைகளை தாராளமாக்க வேண்டும். குறைந்தபட்சம் கிடைக்கும் துளியூண்டு வட்டிக்கேனும் வரி கட்டாமல் இருக்க வகை செய்தால் போதும்.
நான் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன். மாதம் 85 ஆயிரம் ரூபாய் வாங்குகிறேன். தனியார் வங்கியில் கணக்கு உள்ளது. எனக்கு தனியார் வங்கி 10 லட்சம் ரூபாய் மதிப்பில் - 2 கடன் அட்டை வழங்கி உள்ளது. ஒன்று நானும், மற்றொன்றை என் நண்பரும் உபயோகிக்கின்றோம். மாதா மாதம் 5 லட்சம் ரூபாய் வரை உபயோகிப்போம். என்னுடைய நண்பர் தான் அதிக அளவு உபயோகிப்பார். ரிவார்டு பாயின்டுகளுக்காக அதிக அளவு உபயோகிப்போம். தவணை தேதி வரும் முன்னரே முழு தொகையையும் என் வங்கி கணக்கு வாயிலாக செலுத்திவிடுவோம். ஆண்டு வருமானம் - 10 லட்சம். ஆனால் கடன் அட்டை உபயோகம் - 60 லட்சம் வரை. இதனால் வருமான வரி பிரச்னை ஏற்படுமா?
ஏ. ஆனந்தசந்திரன், மின்னஞ்சல்.
உங்களுடையது 'உயர்மதிப்பிலான பரிவர்த்தனை' என்ற கணக்கில் வரும். உங்கள் கிரெடிட் கார்டு நிறுவனம், வருமான வரித் துறைக்கு உங்கள் பரிவர்த்தனைகள் அனைத்தையும் தெரியப்படுத்தி வரும். செலவு செய்வதற்கு ஈடாக உங்களுக்கு எப்படி வருமானம் வருகிறது என்பதை விளக்கச் சொல்லி 'நோட்டீஸ்' வரலாம். விளக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. சம்பந்தமில்லை என்றாலும், அக்கறையால் சொல்லத் தோன்றுகிறது. ரிவார்டு பாயின்டுக்காக ஆசைப்படுவது, அமெரிக்க கிரெடிட் கார்டு பயனர்கள் மத்தியில் தான் அதிகம். அந்த மோகம் இங்கும் வந்துவிட்டது என்பதுதான் ஆச்சரியம் அளிக்கிறது. கிரெடிட் கார்டு உங்களை அடிமைப்படுத்திவிட்டது என்பதை மட்டும் உணர்ந்துகொள்ளுங்கள்.
கடந்த சில வாரங்களாக, 'உங்களிடம், 786 எனும் எண்ணில் முடியும் பழைய 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய், நோட்டுகள் வைத்துள்ளீர்களா? அப்படியெனில் நீங்கள் கோடீஸ்வரர் என்றும், 2 ரூபாய் காயின் இருந்தால், 5 லட்சம் பெறலாம் என்றும், சில வழிகாட்டு தல்களுடன் செய்தி வருகிறதே? இது எந்த அளவிற்கு உண்மை?

எ.அப்துல் மாலிக், வேல்வார் கோட்டை.
இதுதொடர்பாக ஆர்.பி.ஐ., சமீபத்தில் ஓர் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. நாங்கள் எந்த ஓர் அமைப்பையோ, நிறுவனத்தையோ, தனிநபரையோ, இதுபோன்ற நாணயங்களை வாங்குவதற்கு நியமிக்கவில்லை. பொதுமக்கள், பழைய நாணயங்களையும் ரூபாய் நோட்டுகளையும் வாங்குகிற, விற்பனை செய்கிற மோசடிக் கும்பலிடம் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது. மக்களுடைய அறியாமையைப் பயன்படுத்தி, தனிநபர் விபரங்களைத் திருடும் கும்பலின் வேலை இது. எச்சரிக்கையுடன் இருங்கள்!
எனது மகள் சிங்கப்பூர் பிரஜையாகி, அங்கேயே குடும்பத்துடன் வசிக்கிறாள். நான் சென்னையில் கட்டியிருந்த வீட்டை 2015ல் விற்று, அதற்குண்டான வருமான வரி கட்டிய பின், மீதி பணத்தை வங்கியில் வைப்பு கணக்கில் வைத்திருக்கிறேன். இந்த பணத்தில் இப்போது மகளுக்கு ஒரு பங்கு கொடுக்க நினைக்கிறேன். எவ்வாறு அனுப்புவது? மகள் வரி கட்டவேண்டியிருக்குமா?
ராமலிங்கம் எஸ், சென்னை 56.

நீங்கள் ஆன்லைனிலேயே உங்கள் மகளுக்கு பணத்தை டிரான்ஸ்பர் செய்யலாம். ஒரு நிதியாண்டில், 2 லட்சத்து, 50 ஆயிரம் அமெரிக்க டாலர் அளவுக்கு நீங்கள் அனுப்பி வைக்கலாம். சிங்கப்பூரில் 'பரிசு' வரி இல்லை என்று கருதுகிறேன். மேலும், இதனை நீங்கள் பரிசாகத் தான் கொடுக்கிறீர்கள் என்பதால், உங்கள் மகள் வரி கட்ட வேண்டியிருக்காது. அந்த ஊர் சட்டங்கள் என்ன சொல்கின்றன என்பது எனக்குத் தெரியாது. உங்கள் மகளையே கலந்தாலோசியுங்கள்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸ் ஆப்' வாயிலாக அனுப்பலாம்.

ஆயிரம் சந்தேகங்கள்

தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.

ஆர்.வெங்கடேஷ், [email protected] ph: 98410 53881

மூலக்கதை