ஆஷஸ் கோப்பை வென்றது ஆஸ்திரேலியா: ஹோபர்ட் டெஸ்டில் அசத்தல் வெற்றி | ஜனவரி 16, 2022

தினமலர்  தினமலர்
ஆஷஸ் கோப்பை வென்றது ஆஸ்திரேலியா: ஹோபர்ட் டெஸ்டில் அசத்தல் வெற்றி | ஜனவரி 16, 2022

ஹோபர்ட்: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்டில் 146 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, ஆஷஸ் தொடரை 4–0 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.

ஆஸ்திரேலியா சென்ற இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 3–0 என, ஏற்கனவே தொடரை கைப்பற்றி முன்னிலையில் இருந்தது. ஐந்தாவது டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக ஹோபர்ட்டில் நடந்தது. இதன் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 303, இங்கிலாந்து 188 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில், 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுக்கு 37 ரன் எடுத்திருந்தது. ஸ்மித் (17), போலண்ட் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

உட் அசத்தல்: மூன்றாம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு மார்க் உட் தொல்லை தந்தார். இவரது ‘வேகத்தில்’ ஸ்காட் போலண்ட் (8), டிராவிஸ் ஹெட் (8), ஸ்டீவ் ஸ்மித் (27) வெளியேறினர். ஸ்டூவர்ட் பிராட் பந்தில் கேமிரான் கிரீன் (23), அலெக்ஸ் கேரி (49) ஆட்டமிழந்தனர். தொடர்ந்து அசத்திய மார்க் உட் பந்தில் மிட்சல் ஸ்டார்க் (1), கேப்டன் கம்மின்ஸ் (13) ஆட்டமிழந்தனர். இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 155 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. நாதன் லியான் (4) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் மார்க் உட் 6, பிராட் 3 விக்கெட் வீழ்த்தினர்.

 

சவாலான இலக்கு: பின், 271 ரன் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு, ஆஸ்திரேலிய ‘வேகங்கள்’ நெருக்கடி தந்தனர். கேமிரான் கிரீன் பந்தில் ரோரி பர்ன்ஸ் (26), ஜாக் கிராலே (36), டேவிட் மலான் (10) அவுட்டாகினர். ஸ்காட் போலண்ட் ‘வேகத்தில்’ கேப்டன் ஜோ ரூட் (11), சாம் பில்லிங்ஸ் (1), கிறிஸ் வோக்ஸ் (5) வெளியேறினர். பென் ஸ்டோக்ஸ் (5) ஏமாற்றினார். கம்மின்ஸ் பந்தில் போப் (5), மார்க் உட் (11), ராபின்சன் (0) சரணடைந்தனர்.

 

இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 124 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. பிராட் (1) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ், போலண்ட், கிரீன் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் வென்றார்.

34வது முறை

ஆஸ்திரேலிய அணி 34வது முறையாக ஆஷஸ் கோப்பை வென்றது. இதுவரை 72 முறை (1882–2022) நடந்த இத்தொடரில் ஆஸ்திரேலியா 34, இங்கிலாந்து 32 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. ஆறு முறை தொடர் சமன் ஆனது.

 

10வது வெற்றி

ஆஸ்திரேலிய அணி, பகலிரவு டெஸ்டில் தொடர்ச்சியாக 10வது வெற்றியை பதிவு செய்தது. இதில் இங்கிலாந்துக்கு (2017, 2021, 2022) எதிராக 3, நியூசிலாந்து (2015, 2019), பாகிஸ்தானுக்கு (2016, 2019) எதிராக தலா 2, தென் ஆப்ரிக்கா (2016), இலங்கை (2019), இந்தியாவுக்கு (2020) எதிராக தலா ஒரு டெஸ்டில் வென்றது.

 

357 ரன்

அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் முதலிடம் பிடித்தார். இவர், 4 டெஸ்டில், 2 சதம், ஒரு அரைசதம் உட்பட 357 ரன் எடுத்தார். அடுத்த இரு இடங்களை ஆஸ்திரேலியாவின் லபுசேன் (335 ரன்), இங்கிலாந்தின் ஜோ ரூட் (322) கைப்பற்றினர்.

 

21 விக்கெட்

அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் முதலிடத்தை தட்டிச் சென்றார். இவர், 4 டெஸ்டில் 21 விக்கெட் சாய்த்தார். அடுத்த மூன்று இடங்களை ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் (19 விக்கெட்), போலண்ட் (18), இங்கிலாந்தின் மார்க் உட் (17) பிடித்தனர்.

மூலக்கதை