விராத் கோஹ்லியின் விலகல் பின்னணி | ஜனவரி 16, 2022

தினமலர்  தினமலர்
விராத் கோஹ்லியின் விலகல் பின்னணி | ஜனவரி 16, 2022

கேப்டவுன்: டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோஹ்லி திடீரென விலகியதற்கு பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி உடனான சர்ச்சை, இவரது ‘பார்ம்’ போன்றவை காரணமாக இருக்கலாம்.

தென் ஆப்ரிக்கா சென்ற கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1–2 என இழந்தது. இதனையடுத்து கோஹ்லி, கேப்டன் பதவியில் இருந்து திடீரென விலகினார். இதற்கு இரண்டு வித காரணம் கூறப்படுகின்றன.

 

கடந்த ஆண்டு எமிரேட்சில் நடந்த ‘டி–20’ உலக கோப்பைக்கு பின், ‘டி–20’ அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோஹ்லி விலகினார். ஒருநாள், ‘டி–20’ அணிகளுக்கு ஒருவர் மட்டுமே கேப்டனாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்த பி.சி.சி.ஐ., ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து கோஹ்லியை நீக்கியது. இவ்விரு அணிகளுக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமித்தது. அப்போது பேசிய கங்குலி, ‘‘கோஹ்லியிடம், ‘டி–20’ அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று வலியுறுத்தினோம்,’’ என்றார். இதுகுறித்து கூறிய கோஹ்லி ‘‘பி.சி.சி.ஐ., சார்பில் ‘டி–20’ கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று என்னிடம் யாரும் தெரிவிக்கவில்லை,’’ என்றார். இக்கருத்து, மிகப் பெரிய சர்ச்சையானது. ஆனால், தென் ஆப்ரிக்க தொடர் காரணமாக இவ்விஷயத்தில் பி.சி.சி.ஐ., மவுனம் காத்தது.

 

கடந்த 2019க்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் கோஹ்லி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ‘டி–20’ உலக கோப்பையிலும் இந்திய அணி ‘சூப்பர்–12’ சுற்றோடு திரும்பியது. இதனால் தென் ஆப்ரிக்க தொடர் இவருக்கு முக்கியமானதாக கருதப்பட்டது. இதில் பேட்டிங்கில் எழுச்சி கண்டு, தென் ஆப்ரிக்க மண்ணில் முதன்முறையாக தொடரை கைப்பற்றினால் மட்டுமே டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் நீடிக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் பேட்டிங்கில் பெரிய அளவில் சோபிக்காத இவர், அணிக்கு கோப்பை பெற்றுத்தரவில்லை. இதனால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக இவர் பதவி விலகி இருக்கலாம்.

 

சொந்த முடிவு: கங்குலி

கோஹ்லி விலகல் குறித்து பி.சி.சி.ஐ., தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில், ‘‘கோஹ்லி தலைமையில் இந்திய கிரிக்கெட் மூன்று வித போட்டிகளிலும் நல்ல முன்னேற்றம் கண்டது. தற்போது கேப்டன் பதவியில் இருந்து விலகியது அவரது சொந்த முடிவு. அதற்கு பி.சி.சி.ஐ., மதிப்பளிக்கிறது. இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு வீரராக இவரது பங்களிப்பு தொடரும்,’’ என்றார்.

 

ரோகித் சர்மா அதிர்ச்சி

இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா கூறுகையில், ‘‘டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோஹ்லி விலகியது அதிர்ச்சி அளிக்கிறது. இருப்பினும் வெற்றிகரமான கேப்டனாக விளங்கியதற்கு பாராட்டுக்கள். அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்,’’ என்றார்.

 

அஷ்வின் வாழ்த்து

தமிழக ‘சுழல்’ வீரர் அஷ்வின் கூறுகையில், ‘‘கிரிக்கெட் அரங்கில், கேப்டன்கள் படைத்த சாதனைகள், அணியை வழிநடத்திய விதம் எப்போதும் பேசப்படும். உங்களது செயல்பாடு, சிறந்த கேப்டனுக்கான ஒரு தனி அடையாளமாக இருக்கும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, தென் ஆப்ரிக்க நாடுகளில் உங்களது தலைமையில் கிடைத்த வெற்றி என்றும் மகத்தானது,’’ என்றார்.

மூலக்கதை