கோவிட் பாதிப்பு: புதிய காப்பீடுபாலிசிகளுக்கு காத்திருப்பு காலம்

தினமலர்  தினமலர்
கோவிட் பாதிப்பு: புதிய காப்பீடுபாலிசிகளுக்கு காத்திருப்பு காலம்

கோவிட் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள் புதிய பாலிசி பெற, மூன்று மாதம் காத்திருப்பு காலத்திற்கு உள்ளாக வேண்டும் என காப்பீடு நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன.

காப்பீடு பெறுவதன் அவசியத்தை பலரும் உணர்ந்துள்ள நிலையில், கோவிட் பாதிப்புக்கு உள்ளானவர்கள் புதிய ஆயுள் காப்பீடு பாலிசி பெற விரும்பினால், அதற்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. கோவிட் தொற்றில் இருந்து மீண்டவர்கள், புதிய பாலிசியை பெறுவதற்கு காத்திருப்பு காலத்திற்கு உள்ளாக வேண்டும் என ஆயுள் காப்பீடு நிறுவனங்கள் வலியுறுத்த துவங்கியுள்ளன.

நாடு முழுதும் மூன்றாம் அலை பாதிப்பு பரவி வரும் சூழலில், ஒரு சில காப்பீடு நிறுவனங்கள் மருத்துவ பரிசோதனை தொடர்பாக கூடுதல் நிபந்தனைகளையும் விதிக்கின்றன.

‘டெர்ம்’ காப்பீடு


பொதுவாக காப்பீடு துறையில் ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு பாலிசிகளுக்கு, குறிப்பிட்ட நோய் பாதிப்பு தொடர்பாக காத்திருப்பு காலம் நிபந்தனை பின்பற்றப்பட்டு வருகிறது. பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு பாலிசியை விற்பனை செய்யும் முன், அவர்களது இடர் தன்மையை அறிய காத்திருப்பு காலம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது ஆயுள் காப்பீடு நிறுவனங்கள், கோவிட் பாதிப்பையும் இந்த பட்டியலில் சேர்த்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக, கோவிட் தொற்று ஏற்பட்டு மீண்டு வந்தவர்கள், புதிதாக ‘டெர்ம்’ காப்பீடு பாலிசி எடுக்க விரும்பினால், காத்திருப்பு காலம் பொருந்தும். காப்பீடு நிறுவனங்களுக்கு ஏற்ப 30 நாட்கள் முதல் மூன்று மாதம் வரை அமையலாம்.காப்பீடு நிறுவனங்களுக்கு காப்பீடு அளிக்கும் மறு காப்பீடு நிறுவனங்கள் வலியுறுத்தல் காரணமாக, இந்த நிபந்தனை நடைமுறைக்கு வந்துள்ளதாக காப்பீடு வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

கோவிட் தொற்று காரணமாக இழப்பீடு கோருவது அதிகரித்துள்ளதால், செலவையும், இடரையும் எதிர்கொள்ள மறு காப்பீடு நிறுவனங்கள் இந்த நிபந்தனையை வலியுறுத்துகின்றன. எனவே, கோவிட் தொற்றில் இருந்து மீண்டவர்கள் புதிய டெர்ம் காப்பீடு பாலிசி பெற, காத்திருப்பு காலத்தை எதிர்கொள்ள வேண்டும்.

பிரீமியம் உயர்வு

இரண்டாம் அலை பாதிப்பின் போதே அமலுக்கு வந்த இந்த போக்கு தற்போது முழு வீச்சில் நடைமுறைப்படுத்தப்படுவதாக கூறுகின்றனர். டெர்ம் பாலிசி பெறுபவர்கள், கோவிட் அறிவிப்பு தொடர்பான விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இதில், 90 நாட்களுக்குள் கோவிட் தொற்று ஏற்பட்டதா எனும் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். தொற்று பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப காத்திருப்பு காலம் அமையலாம் என்பதோடு, ஒரு சில காப்பீடு நிறுவனங்கள், கூடுதல் மருத்துவ பரிசோதனையையும் வலியுறுத்துவதாக தெரிய வந்துள்ளது.

வீட்டிலேயே சிகிச்சை பெற்றிருந்தால் குறைவான காத்திருப்பு காலம் பொருந்தும். மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றிருந்தால், மூன்று மாதம் காத்திருப்பு காலமாக அமையலாம்.ஏற்கனவே, டெர்ம் காப்பீடு பாலிசிகளுக்கான பிரீமியம் தொகை, 30 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், டெர்ம் காப்பீடு பாலிசிகளுக்கான பாதுகாப்பு தொகை நிர்ணயிக்கப்படுவதிலும் தாக்கம் செலுத்துவதாக கூறுகின்றனர்.

காத்திருப்பு காலம் தொடர்பான நிபந்தனை ஆயுள் காப்பீடு பாலிசிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். அதிலும் புதிதாக பெறும் பாலிசிகளுக்கே பொருந்தும். மருத்துவ காப்பீடு மற்றும் ஏற்கனவே காப்பீடு பெற்றவர்களுக்கு இதனால் பாதிப்பு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை