அனைவருக்கும் இலவச மின்சாரம், குடிநீர் சேவை; பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை: 13 கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி...!

தினகரன்  தினகரன்
அனைவருக்கும் இலவச மின்சாரம், குடிநீர் சேவை; பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை: 13 கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி...!

பனாஜி: எதிர்வரும் கோவா சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 13 அம்ச தேர்தல் வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சியில் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். கோவாவில் வரும் பிப்.14ம் தேதி 40 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட உள்ள ஆம் ஆத்மி கட்சி தனது தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் தேசிய  ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்; கோவா மக்களுக்கு 13 அம்ச தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். கோவாவில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால் அனைவர்க்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும்; வேலை கிடைக்காதவர்களுக்கு உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.3,000 வழங்கப்படும் என அறிவித்தார். 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் 1,000 வழங்கப்படும். தரமான கல்வி மற்றும் மருத்துவ சேவையை அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும். ஊழலற்ற மாநிலமாக கோவா மாற்றப்படும். அனைவர்க்கும் இலவசமாக மின்சாரம் மற்றும் குடிநீர் சேவை வழங்கப்படும் எனவும் அறிவித்தார். ஆம் ஆத்மி கட்சியின் கவர்ச்சிகர அறிவிப்புகள் மூலம் கோவா தேர்தலில் காங்கிரஸ், பாஜகவுக்கு கடும் போட்டியை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை