ஆஸ்திரேலிய அணி அபார பந்துவீச்சு: 188 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து | ஜனவரி 15, 2022

தினமலர்  தினமலர்
ஆஸ்திரேலிய அணி அபார பந்துவீச்சு: 188 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து | ஜனவரி 15, 2022

ஹோபர்ட்: ஐந்தாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய பவுலர்கள் அசத்த, முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 188 ரன்னுக்கு சுருண்டது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3–0 என, ஏற்கனவே தொடரை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. ஐந்தாவது டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக ஹோபர்ட்டில் நடக்கிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்க 241 ரன் எடுத்திருந்தது. அலெக்ஸ் கேரி (10) அவுட்டாகாமல் இருந்தார்.

 

லியான் ஆறுதல்: இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணியின் மிட்சல் ஸ்டார்க் (3), கேப்டன் பாட் கம்மின்ஸ் (2), மார்க் உட் ‘வேகத்தில்’ வெளியேறினர். அலெக்ஸ் கேரி (24), நாதன் லியான் (31) ஓரளவு கைகொடுத்தனர். முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 303 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. ஸ்காட் போலண்ட் (10) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராட், மார்க் உட் தலா 3, ராபின்சன், கிறிஸ் வோக்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

 

கம்மின்ஸ் கலக்கல்: பின், முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணியின் ரோரி பர்ன்ஸ் (0) ‘ரன்–அவுட்’ ஆனார். கம்மின்ஸ் ‘வேகத்தில்’ ஜாக் கிராலே (18), டேவிட் மலான் (25), கேப்டன் ஜோ ரூட் (34) அவுட்டாகினர். மிட்சல் ஸ்டார்க் பந்தில் பென் ஸ்டோக்ஸ் (4) ஆட்டமிழந்தார். போப் (14) நிலைக்கவில்லை. சாம் பில்லிங்ஸ் (29), கிறிஸ் வோக்ஸ் (36) ஆறுதல் தந்தனர். மார்க் உட் (16), ஸ்டூவர்ட் பிராட் (0) ஏமாற்றினர்.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 188 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 4, ஸ்டார்க் 3 விக்கெட் கைப்பற்றினர்.

 

வார்னர் ஏமாற்றம்: பின், 115 ரன் முன்னிலையுபன் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் (0), மார்னஸ் லபுசேன் (5), உஸ்மான் கவாஜா (11) ஏமாற்றினர். அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித், ஸ்காட் போலண்ட் ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுக்கு 37 ரன் எடுத்து, 152 ரன் முன்னிலையில் இருந்தது. ஸ்மித் (17), போலண்ட் (3) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் பிராட், வோக்ஸ், உட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

மூலக்கதை