இந்திய அணியில் மும்முனைப் போட்டி: புஜாரா–ரகானே இடத்துக்கு | ஜனவரி 15, 2022

தினமலர்  தினமலர்
இந்திய அணியில் மும்முனைப் போட்டி: புஜாரா–ரகானே இடத்துக்கு | ஜனவரி 15, 2022

புதுடில்லி: இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க சுப்மன் கில், ஸ்ரேயாஸ், விஹாரி என, மும்முனைப் போட்டி நிலவுகிறது.

தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் வென்ற இந்திய அணி, அடுத்த இரு போட்டிகளில் தோல்வியடைந்து, தொடரை 1–2 எனக் கோட்டைவிட்டது. இனி, சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் வரும் பிப். 25ல் பெங்களூருவில் துவங்குகிறது. இத்தொடருக்கான இந்திய அணியில் ‘பார்மின்றி’ தவிக்கும் புஜாரா, அஜின்கியா ரகானே நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஏனெனில் சமீபத்தில் முடிந்த தென் ஆப்ரிக்க தொடரில் இவர்கள் மோசமாக விளையாடினர். ரகானே 136 (சராசரி 22.66), புஜாரா 124 (சராசரி 20.66) ரன் மட்டுமே எடுத்தனர்.

 

புஜாரா, ரகானே நீக்கப்படும் பட்சத்தில் ‘மிடில்–ஆர்டரில்’ இரு இடம் காலியாகிவிடும். தற்போது காயத்தால் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஓய்வில் உள்ளனர். இவர்கள் அணிக்கு திரும்பும் பட்சத்தில் இவ்விரு இடங்களை பிடிக்க சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரிக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவும். ஏனெனில் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுலுடன் இணைந்து துவக்க வீரராக களமிறங்குவார். இதனால் ‘மிடில்–ஆர்டரில்’ சுப்மன், ஸ்ரேயாஸ், விஹாரி என மூவரில், இருவருக்கு மட்டுமே இடம் கிடைக்கும். இந்திய அணி நிர்வாகம், அணித் தேர்வாளர்கள் சுப்மன் கில்லுக்கு முன்னுரிமை வழங்கினால், மீதமுள்ள ஒரு இடத்துக்கு ஸ்ரேயாஸ் அல்லது விஹாரி தேர்வாகலாம்.

 

கவாஸ்கர் கணிப்பு: இதுகுறித்து இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறுகையில், ‘‘தென் ஆப்ரிக்க தொடரில் ஏமாற்றிய புஜாரா, ரகானே, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நீக்கப்படலாம். இவர்களுக்கு பதிலாக ஸ்ரேயாஸ், விஹாரி தேர்வு செய்யப்படலாம். இதில் விஹாரி 3வது இடத்திலும், ஸ்ரேயாஸ் 5வது இடத்திலும் களமிறங்குவர் என்று எதிர்பார்க்கிறேன். தேர்வுக்குழுவினரின் முடிவை பொறுத்திருந்து பார்ப்போம்,’’ என்றார்.

மூலக்கதை