பொருளாதார வளர்ச்சி குறித்து இந்திய வணிகங்கள் நம்பிக்கை

தினமலர்  தினமலர்
பொருளாதார வளர்ச்சி குறித்து இந்திய வணிகங்கள் நம்பிக்கை

புதுடில்லி:கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையிலும், இந்திய பொருளாதாரம் குறித்து, இந்திய வணிகங்கள் அதிக நம்பிக்கையுடன் இருப்பது, ஆய்வு ஒன்றின் வாயிலாக தெரியவந்துள்ளது.
‘டெலாய்ட்’ நிறுவனத்தின் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆய்வின் வாயிலாக, இது தெரியவந்து உள்ளது. இந்நிறுவனம், இந்தியாவில் 10 துறைகளை சேர்ந்த, 163 தொழில்துறை தலைவர்களிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது. இதில் 75 சதவீதம் பேர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிட்டத்தட்ட 91 சதவீதம் பேர், அரசின் ‘ஆத்மநிர்பர் பாரத்’ முயற்சிகள் மற்றும், ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை முடிவுகள் ஆகியவை, இந்தியாவின் பொருளாதார மீட்சிக்கு மிகவும் உதவியாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

மேலும், உள்கட்டமைப்பு முதலீடுகளில், நீண்ட கால முதலீடுகளுக்கு வழங்கப்படும் கூடுதல் வரி சலுகைகள் வளர்ச்சிக்கு உதவும் என, 55 சதவீத தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த பட்ஜெட்டில், மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகளுக்கான செலவினங்களுக்கு அதிக சலுகைகள் வழங்குவது குறித்து கவனிக்க வேண்டும் என்று 45 சதவீதம் பேர் எதிர்பார்க்கின்றனர்.
ஏற்றுமதி
போட்டித் தன்மையை அதிகரிப்பது, போட்டியை சமாளிக்கும் விதத்திலான இறக்குமதி கட்டணங்கள், நிர்வாக திறமையின்மையை குறைப்பது ஆகிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, மேலும் பலர் தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர்.இவ்வாறு டெலாய்ட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை