அபார வளர்ச்சி கண்ட ஆயத்த ஆடை ஏற்றுமதி

தினமலர்  தினமலர்
அபார வளர்ச்சி கண்ட ஆயத்த ஆடை ஏற்றுமதி

திருப்பூர்:கடந்த ஏப்., – டிச., வரையிலான ஒன்பது மாதங்களில், இந்தியாவில் இருந்து 82 ஆயிரத்து, 653 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியாகி உள்ளன.
நடப்பு நிதியாண்டின் துவக்கம் முதலே, நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், நேர்மறை வளர்ச்சியுடன் பயணிக்கிறது. கடந்த நிதியாண்டின் ஏப்., மாதத்தை விட, இந்த நிதியாண்டின் ஏப்., மாதத்தில் 903.34 சதவீதம் ஆடை ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
கடந்த 2020 டிசம்பரில், 8,800 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதுவே கடந்த டிசம்பரில், 11 ஆயிரம் கோடி ரூபாயாக, 25.60 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் ஏப்., – டிச., வரையிலான ஒன்பது மாதங்களில், நாட்டின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், 83 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.
இது, கடந்த நிதியாண்டின் ஒன்பது மாதங்களை விட, 36 சதவீதம் அதிகம்.நடப்பு நிதியாண்டின் ஒன்பது மாதங்களில், நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், 45 ஆயிரம் கோடி ரூபாயை தொட்டுள்ளது. இதில், திருப்பூரின் ஏற்றுமதி 23 ஆயிரம் ரூபாய். வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதால், நடப்பு நிதியாண்டுக்கான திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் 32 ஆயிரம் கோடி ரூபாயை கடந்துவிடும் என, தொழில் துறையினர் கணித்துள்ளனர்.

மூலக்கதை