திவாலை நோக்கிச் செல்லும் இலங்கைக்கு இந்தியா நிதியுதவி; உணவுப் பொருட்களை வாங்க சுமார் ரூ. 6,700 கோடி நிதி

தினகரன்  தினகரன்
திவாலை நோக்கிச் செல்லும் இலங்கைக்கு இந்தியா நிதியுதவி; உணவுப் பொருட்களை வாங்க சுமார் ரூ. 6,700 கோடி நிதி

கொழும்பு: அந்நிய செலாவணி கரைந்து போனதால் திவாலை நோக்கி செல்லும் இலங்கைக்கு ரூ. 6,700 கோடி கடனுதவி அளிக்க இந்திய முன்வந்துள்ளது. வேலையிழப்பு, வருவாய் இழப்பு, நாட்டின் பணவீக்கம், உணவு பணவீக்கம்உள்ளிட்ட காரணங்களால் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. சீனாவிடமும், சர்வதேச வங்கிகளிடமும் கடன் பெற்றுள்ள இலங்கை, நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் கண்டு வரும் நிலையில் கடனை எப்படி அடைப்பது என்று தெரியாமல் திக்குமுக்காடி போயுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்குள்ளாக சுமார் 7.3 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான உள்நாட்டு, வெளிநாட்டு கடன்களை இலங்கை அரசு திருப்பி செலுத்தவேண்டியுள்ளது. அதிலும் குறிப்பாக ஜனவரி மாதத்திற்குள்ளாக 500 மில்லியன் டாலர் கடனை திருப்பி செலுத்தவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இலங்கை சிக்கியுள்ளது. உணவு,பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கூட கடும்  தட்டுப்பாடு நிலவும் நிலையில் அவற்றை இறக்குமதி செய்ய போதுமான அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாமல் இலங்கை தவிக்கின்றது. இதையடுத்து இலங்கையில் நிலவும் உணவு தட்டுப்பாட்டை போக்க இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது. தற்போதைய சிக்கலிலிருந்து மீண்டு வர ரூ. 6,700 கோடியை அளிக்க இந்தியா முன்வந்துள்ளது. இதன்மூலம் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து நாட்டில் நிலவும் உணவு தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தெரிவித்துள்ளது.        

மூலக்கதை