முழு ஊரடங்கு அமல்படுத்தும் எண்ணம் அரசிடம் கிடையாது: அமைச்சர் சுதாகர் தகவல்

தினகரன்  தினகரன்
முழு ஊரடங்கு அமல்படுத்தும் எண்ணம் அரசிடம் கிடையாது: அமைச்சர் சுதாகர் தகவல்

பெங்களூரு: முழு ஊரடங்கு அமல்படுத்தும் எண்ணம் அரசிடம் கிடையாது என்று சுகாதார துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்தார். பெங்களூருவில் உள்ள பிஎம்சிஆர்ஐ மருத்துவமனையில் மாநில கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேற்று பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில சுகாதார துறை அமைச்சர் சுதாகர் நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடக மாநிலத்தில் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் பணி விரைவாக நடந்து வருகிறது. இதுவரை 83,937 பேர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதில் 1,179 பேர் கர்ப்பிணிகள். கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க வேண்டும் என்பதற்காக மாநில அரசின் சார்பில் கடின விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. முக கவசம் அணிவது, அடிக்கடி கைகளை கிருமிநாசினி உதவியால் சுத்தம் செய்ய வேண்டும். தேவையின்றி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது. கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவியுள்ளது. நமது இந்தியாவிலும் வைரஸ் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. கர்நாடக மாநிலத்திலும் பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பூசி போடும் பணி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறாம். முதல்வர் , பிரதமர் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.  பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். எனவே, மக்கள் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும். கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே கொரோனா வைரசை வெற்றி கொள்ள முடியும். கொரோனா வைரஸ் தொற்று பரவல் மாநிலத்தில் அதிகரித்து வந்தாலும் தற்போது அமலில் இருக்கிற கடின விதிகள் தவிர முழு ஊரடங்கு அமல்படுத்தும் எண்ணம் அரசிடம் கிடையாது. வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்தாலும் 5-6 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகின்றனர். எனவே, மாநிலத்தில் மூன்றாவது அலை பரவுகிறது என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே மக்கள் அச்சம் கொள்ள தேவை கிடையாது. இதற்கு முன்பு கொரோனா இரண்டாவது அலை பரவல் அதிகரித்த போது கொரோனா பரவல் செயினை தடுப்பதற்கு 14 நாள் தேவைப்பட்டது. எனவே, வார இறுதி ஊரடங்கு சில வாரம் நீட்டிப்பு செய்யப்படலாம். முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை நடத்தி அறிவிப்பார்கள்.  இவ்வாறு அமைச்சர் டாக்டர் கே சுதாகர் கூறினார்.

மூலக்கதை