கொரோனா உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கும் நிலையிலும் 31ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது: பிப். 1ல் ஒன்றிய பட்ஜெட் தாக்கல்

தினகரன்  தினகரன்
கொரோனா உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கும் நிலையிலும் 31ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது: பிப். 1ல் ஒன்றிய பட்ஜெட் தாக்கல்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாதம் 31ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறும் எனவும், பிப்ரவரி 1ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும், நாடாளுமன்ற விவகார அமைச்சகம் நேற்று  அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா பரவல் உச்சம் தொட்டு வரும் நிலையிலும், பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. சில மாநிலங்களில் ஞாயிறு முழு ஊரடங்கும், இரவு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த மாதம் முதல் வாரத்திலேயே, நாடாளுமன்ற ஊழியர்கள் 400க்கும் மேற்பட்டோருக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத்தொடர் வழக்கம் போல் குறித்த நாளில் துவங்குமா என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து, நாடாளுமன்ற இரு அவைகளையும் சுமூகமாக நடத்துவது தொடர்பாகவும், கொரோனா பரவல் சூழ்நிலையில் இந்த கூட்டத்தொடரை நடத்துவது எவ்வாறு? இதற்கான சாத்தியக்கூறுகள் என்னென்ன என்பது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டன.  இந்நிலையில், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது தொடர்பாக, நாடாளுமன்ற விவகார அமைச்சகம் சார்பில் நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர், இந்த மாதம் 31ம் தேதி ஜனாதிபதி உரையுடன் துவங்குகிறது. அன்றைய தினம், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றுகிறார். கூட்டத்தொடர் 8ம் தேதி வரை நடக்கிறது.  ஜனாதிபதி உரையை தொடர்ந்து, பிப்ரவரி 1ம் தேதி காலை 11 மணிக்கு, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட் கூட்டத்தொடர் 2 பகுதிகளாக நடக்கிறது. முதல் பகுதியாக ஜனவரி 31ம் தேதி தொடங்கும் கூட்டத்தொடர், பிப்ரவரி மாதம் 11ம் தேதி வரை நடக்கிறது. இரண்டாவது பகுதி கூட்டத்தொடர், மார்ச் 14ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறுகிறது.  கொரோனா பரவல் காரணமாக கடந்த சுமார் 2 ஆண்டுகளாக, பல்வேறு தொழில்துறைகள் முடங்கின. தற்போது இதில் இருந்து மீண்டு வரும் நிலையில், ஒமிக்ரான் மூலம் 3வது அலை உருவாகி விட்டது. டெல்லி, மகாராஷ்டிரா உட்பட சில மாநிலங்களில் உச்சம் தொட்டு வருகிறது. ஏற்கெனவே கொரோனா பரவலின்போது ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட சலுகை அறிவிப்புகள் போதுமானதாக இல்லை என, தொழில்துறையினர் கூறியிருந்தனர். எனவே, எதிர் வரும் பட்ஜெட் மீது, பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.  குறிப்பாக, தனிநபர் வருமான வரிக்கான உச்சவரம்பு உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு, நடுத்தர மக்களிடையே எழுந்துள்ளது. வருமான வரிச்சலுகை பிரிவு 80சி தான், பெரும்பாலான தனி நபர்களின் வருமான வரி சேமிப்புக்கான வழியாக உள்ளது. ஆனால், இதில் ரூ.1.5 லட்சத்துக்கு மேல் வரிச்சலுகை பெற முடியாது. எனவே, இது குறித்தும் ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  கடந்த முறை பட்ஜெட்டின்போது எதிர்பார்த்தபடி அறிவிப்புகள் வராததால், தொழில்துறையினர் பலர் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், எதிர்பார்த்ததை விட வரி வசூல் அதிகமாக ஒன்றிய அரசுக்கு கிடைத்துள்ளதால், நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறை பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட 6.8 சதவீதத்தை விட குறைவாக இருக்கும் எனவும் அவர்கள் கருதுகின்றனர். உற்பத்தி மற்றும் ஊரக பகுதி பொருளாதாரத்தை மேம்படுத்த பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியிட வேண்டும் எனவும், இதற்கேற்ப உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

மூலக்கதை