எல்லை பிரச்னைக்கு இடையே கர்நாடக மராட்டிய பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
எல்லை பிரச்னைக்கு இடையே கர்நாடக மராட்டிய பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு

மொழி வாரி மாவட்டமாக பிரிக்கப்பட்ட பின்பு, கர்நாடகாவுடன் இணைக்கப்பட்ட பெலகாவி மாவட்டம் தங்களுக்கே  சொந்தம் என்று சுமார் 60 ஆண்டுகளாக மகாராஷ்டிரா உரிமை கொண்டாடி வருகிறது. இதுதொடர்பாக, ஒன்றிய அரசு அமைத்த குழுவும், பெலகாவி மாவட்டம் கர்நாடகாவுக்கே சொந்தம் என்று அறிக்கை கொடுத்தது. இருப்பினும், பெலகாவியில் வசிக்கும் எம்இஎஸ் அமைப்பு உள்ளிட்ட மராட்டிய அமைப்புகள் கர்நாடக அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். ஆனால், பெலகாவியில் இருந்து ஒரு அங்குலம் கூட விட்டு கொடுக்க மாட்டோம் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.சமீபத்தில் பெலகாவியில் நடந்த சட்டப்பேரவை குளிர்க்கால கூட்டத்தொடரின் போது, மராட்டிய அமைப்புகள் சங்கொளி ராயண்ணா சிலை மற்றும் கன்னட கொடிகளை அவமதித்தனர். பதிலுக்கு சத்திரபதி சிவாஜி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். இதனால் கர்நாடக-மகாராஷ்டிரா எல்லையில் பங்யகர வன்முறை வெடித்தது. போலீஸ் வாகனம் எரிப்பு, கன்னடர்கள் வாகனங்கள் மீது தாக்குதல், ஓட்டல்கள் சூறை என மராட்டிய அமைப்புகள் கலவரத்தை ஏற்படுத்தினர். இதனால், எம்இஎஸ் அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளை தடை செய்யக்கோரி, கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இந்த சூழலில் கர்நாடகாவில் உள்ள மராட்டிய மொழி கல்வி பயிற்றுவிக்கும் பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்தது.பெங்களூரு மற்றும் ஒசூர் எல்லைப்பகுதிகளில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வருவதுபோல், பெலகாவியிலும் மராட்டியர்கள், அதிகளவில் வசித்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி கூடங்கள் மராட்டிய மொழியிலேயே நடத்தப்பட்டு வருவதால், பெற்றோர்கள், பெலகாவியை சொந்த ஊரை போன்று கருதி தங்கள் குழந்தைகளை ஆர்வமாக பள்ளி கூடங்களுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். பெலகாவி, பாகல்கோட்டை, விஜயபுராவில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் மராட்டி மொழியிலேயே கல்வி கற்ப்பிகின்றனர். இங்கு கன்னட மொழி 3வது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. இதுதொடர்பாக கல்வித்துறை சார்பில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் மாநிலம் முழுவதும் இயங்கி வரும் 1,272 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1.10 லட்சம் மாணவர்கள் மராட்டி மொழியில் பயின்று வருகின்றனர். இவற்றில் அதிகப்படியான பள்ளிகள், பெலகாவி, பாகல்கோட்டை, விஜயபுரா ஆகிய மாவட்டங்களில்தான் உள்ளது. சுமார் 950 பள்ளிகள் மராட்டிய மொழி முதல் மொழியாக உள்ளது. இதில் மட்டும் 66,339 பேர் மராட்டியை முதல் மொழியாக கொண்டு படித்து வருகின்றனர். இதேபோல், மாநிலம் முழுவதும் 5,011 பள்ளிகள் உருது மொழியை பயிற்றுவித்து வருகின்றனர். இதில் 3.65 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இவைகளில் பெரும்பாலான பள்ளிகளில் உருது மொழிகள் 2வது மற்றும் 3வது பாடமாக பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. தமிழ் மொழி பள்ளிகளை பொறுத்தவரை 122 மட்டுமே இயங்கி வருகிறது. இதில் 5,444 பேர் படித்து வருகின்றனர்.  கர்நாடகத்தில் கன்னட மொழியில் பாடம் கற்க மாணவர்கள் அதிகளவு ஆர்வம் காட்டாத நிலையில், ஏராளமான கன்னட பள்ளிகள் மூடும் நிலை உருவாகி உள்ளது. அப்படி இருக்கையில் மராட்டி மற்றும் உருது மொழி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து காணப்படுகிறது. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் பாரம்பரிய கல்விகள் மற்றும் தங்கள் தாய் மொழிகளை மறந்துவிடகூடாது என்று உருது மற்றும் மராட்டி மொழி பள்ளிகளில் அவர்களை சேர்ப்பதை நிறுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

மூலக்கதை