தினமும் அதிகாரிகளுடன் ஆலோசனை வீட்டில் இருந்தே அரசு பணியை கவனிக்கும் பசவராஜ் பொம்மை

பெங்களூரு: கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தொற்று பரவலை தடுக்கும் வகையில் மருத்துவ நிபுணர்கள், மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி, அவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட போது முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால், வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அமைச்சர்கள், அதிகாரிகளும் பரிசோதனை செய்து தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். இதற்கிடையே முதல்வர் பசவராஜ் பொம்மை மணிப்பால் மருத்துவமனைக்கு சென்று உடல் பரிசோதனை மேற்கொண்ட பிறகு வீடு திரும்பி உள்ளார். முதல்வர் பசவராஜ் பொம்மையின் மகன், மகளுக்கு வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியான நிலையில் அவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதல்வர் பசராஜ் பொம்மை தனக்கு வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதை அனைவருக்கும் தெரிவித்து அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்என்று கேட்டுக்கொண்டார். அத்துடன் வீட்டில் இருந்தபடி சுகாதார துறை அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோருடன் தினந்தோறும் ஆலோசனை நடத்தி வருகிறார். மாவட்ட கலெக்டர்களுடன் தினந்தோறும் ஆலோசனை நடத்தி மாவட்டத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு எவ்வளவு இருக்கிறது? அதை தடுப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி வழங்கும் பணி உள்ளிட்ட விபரங்களை கேட்டு அறிந்து ஆலோசனையும் அளித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முதல்வர் பசவராஜ் பொம்மை காணொளி காட்சியின் மூலமாக மைசுகர் சர்க்கரை ஆலை புனரமைப்பு தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மைசுகர் சர்க்கரை ஆலை புனரமைப்பு செய்யப்பட்டு விரைவில் அது செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் பசவராஜ் பொம்மை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புடன் வீட்டில் தனிமையில் இருந்தாலும் முதல்வர் பசவராஜ் பொம்மை நிர்வாகம் சீர்குலையக்கூடாது என்பதற்காக தினந்தோறும் 10 மணி நேரம் பல்வேறு பணிகளை மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலக்கதை
