கொரோனா மூன்றாவது அலை: வேகம்தான் அதிகம்... ஆபத்து மிகவும் குறைவு...

தினகரன்  தினகரன்
கொரோனா மூன்றாவது அலை: வேகம்தான் அதிகம்... ஆபத்து மிகவும் குறைவு...

பெங்களூரு: கொரோனா மூன்றாவது அலை வேகம் அதிகமாக இருந்தாலும் ஆபத்து குறைவாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா தொற்று கடந்த 2020ம் ஆண்டு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதே ஆண்டு இறுதியில் தொற்று பரவல் குறைந்த நிலையில், 2021 மார்ச் மாதம் இரண்டாவது அலை பரவியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் மாநிலத்தில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். மூச்சு திணறல், வென்டிலேட்டர் மற்றும் ஆக்சிஜன் பற்றாகுறை போன்ற காரணங்களால் பலரின் உயிர் பறிபோனது. கொரோனா இரண்டாவது அலையும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் குறைய தொடங்கி படிப்படியாக டிசம்பர் மாதம் 0.89 சதவீதம் அளவுக்கு சரிந்தது. இதனால் கொரோனா தொற்றில் இருந்து தப்பி விட்டோம் என்று அனைவரும் நிம்மதி பெருமூச்சி விட்டனர். ஆனால் இந்த மகிழ்ச்சி அதிகம் நாட்கள் நீடிக்காமல், டிசம்பர் இறுதி வாரத்தில் மீண்டும் மூன்றாவது அலையாக பரவ தொடங்கியது. கடந்த ஒரு மாதத்தில் தொற்று பரவல் 25 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இது 10.99 சதவீதமாக உயர்ந்துள்ளது. கொரோனா இரண்டாவது அலையின் போது தொண்டையில் அடைப்பு, வாசனை நுகர முடியாமல் இருந்தது. நாக்கில் சுவை உணர முடியாத நிலை, மூச்சு திணறல், கை, கால் வலி, தலைசுற்றல் இப்படி பல பாதிப்புகள் இருந்தது. ஆனால் மூன்றாவது அலையில் மேற்கண்ட பாதிப்பு இல்லாமல் லேசான காய்ச்சல், இருமல், சோர்வு ஆகிய அறிகுறிகள் மட்டும் இருப்பதால், மூன்றாவது அலை வேகமாக பரவியும் ஆபத்து மிகவும் குறைவாக உள்ளது என்று அரசு மருத்துவமனை நிபுணர் லட்சுமண் தெரிவித்தார்.மூன்றாவது அலை சாமானிய மக்களை விட சுகாதார துறையில் பணியாற்றும் ஊழியர்கள், கொரோனா முன்கள பணியாளர்களாக இருந்தவர்களை மட்டுமே பாதித்து வருகிறது என்று டாக்டர் சுதர்சன் தெரிவித்துள்ளார். மூன்றாவது அலையில் பாதிக்கப்படுவோர் 98 சதவீதம் ஐசியூவில் சிகிச்சை பெறும் நிலை ஏற்படாது. ஆஸ்த்துமா உள்ளிட்ட மூச்சி திணறல் பிரச்னை உள்ளவர்கள் மட்டுமே ஐசியூவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மூலக்கதை