கொரோனா தொற்று காலத்தில் இணைய வழி குற்றச்சம்பவங்கள் உயர்வு: டாப் 3 இடங்களில் புதுடெல்லி, பெங்களூரு, மும்பை

தினகரன்  தினகரன்
கொரோனா தொற்று காலத்தில் இணைய வழி குற்றச்சம்பவங்கள் உயர்வு: டாப் 3 இடங்களில் புதுடெல்லி, பெங்களூரு, மும்பை

பெங்களூரு: கொரோனா தொற்று காலத்தில் இணைய வழி குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் உள்ள 257 நகரங்களில் இருந்து மொத்தம் 900 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இணையவழி குற்றச்சம்பவங்கள் தொடர்பான புகார்கள் வரும் நகரங்களில் டாப் 3 இடங்களை புதுடெல்லி, பெங்களூரு, மும்பை நகரங்கள் பெற்றுள்ளன. இதில் 60 சதவீத புகார்கள் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடம் இருந்து வந்துள்ளன. இணையவழியில் மோசடி செய்வதை தடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக அந்த அமைப்பின் இணை நிறுவனரும் மனோதத்துவ நிபுணருமான நிராலி பாட்டியா கூறியதாவது: இணையவழி குற்றச்சம்பவங்கள் தொடர்பாக புகார் அளிக்க அனைவரும் காவல்நிலையத்துக்கு நேரில் செல்வதில்லை. மாறாக அவர்கள் பிறரது உதவியை நாடும் நிலையே உள்ளது. அவ்வாறு அவர்களுக்கு யாரும் உதவ முன்வராத நிலையில் சம்மந்தப்பட்ட நபர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அத்தகைய நபர்களை சென்றடையவே நாங்கள் இந்த அமைப்பை நிறுவினோம். தேவைப்பட்டால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கவுன்சலிங் கொடுப்பதுடன் எப்ஐஆர் பதிவு செய்யவும் உதவுகிறோம். இந்த அமைப்பிடம் புகார் அளித்தவர்களில் சிலர் தற்கொலை செய்துள்ளனர்.உணர்வு பூர்வமான தாக்குதல் வழக்கில் எளிதில் எப்ஐஆர் பெற முடிவதில்லை. புகார்தாரருக்கு கவுன்சிலிங் கொடுப்பதில் அவர்களது குடும்பத்தினரின் பங்கு முக்கியமானது. குறிப்பாக பழிவாங்கும் நோக்கில் ஆபாச படம் அனுப்புதல் அல்லது படத்தை தவறாக பயன்படுத்தும் நிகழ்வுகள் நடந்துவருகிறது.  பாதிக்கப்பட்டவர் எவ்வாறு குறிவைக்கப்பட்டார் என்பதை அவரது  குடும்பத்தினருக்கு புரிய வைக்க முயற்சிப்போம். இந்த அமைப்பில் கடந்த ஆண்டு பெண்களை விட ஆண்களிடம் இருந்து அதிகமாக (54 சதவீதம்) புகார்கள் வந்துள்ளன. இதில் அதிகபட்சம் உத்தரபிரதேசம், மகாராஷ்ராவில் இருந்து வந்துள்ளன. புதிதாக மணமான ஆண், சைபர் தாக்குதலுக்கு ஆளாகிறார். அந்த நபரின் மனைவி மற்றும் சகோதரியின் புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படங்களாக அவர்களது உறவினர்களுக்கு போலி ஐடி மூலம் அனுப்பப்பட்டன. தனது உறவினர்களை சமாதானம் செய்யும் நோக்கில் ஆபாசபடங்களை அந்த ஆணும் அவரது முன்னாள் காதலியும் உருவாக்குகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலக்கதை