பைக் திருடர்களின் தலைநகரமாகும் பெங்களூரு: சொகுசு வாழ்க்கைக்காக திருடும் மாணவர்கள்

தினகரன்  தினகரன்
பைக் திருடர்களின் தலைநகரமாகும் பெங்களூரு: சொகுசு வாழ்க்கைக்காக திருடும் மாணவர்கள்

பெங்களூரு மாநகரம் சமீப காலமாக சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. குறிப்பாக, வீடு புகுந்து திருட்டு, வழிப்பறி, கொள்ளை, கொலை, செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. அந்த வரிசையில் தற்போது பைக் திருடர்களின் கைவரிசை அதிகரித்து உள்ளது. சாலையோரங்கள், வீட்டு வாசலில், அப்பார்ட்மென்ட் வளாகம், பொது இடங்களில் நிறுத்தி வைக்கும் பைக்குகளை கண் இமைக்கும் நேரத்தில் திருடி செல்கின்றனர். போலீசார் எடுத்துள்ள கணக்கெடுப்பு படி மாநகரில் தினமும் 12 முதல் 15 பைக்குகள் திருடுபோகிறது. இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணி, ஹொய்சலா வாகனங்களின் கண்காணிப்பு, உதவி போலீஸ் கமிஷனர்களின் நகர்வளம் என பல அடுக்கு பாதுகாப்பு மாநகரில் இருந்தாலும் பைக் திருடப்படுவது மட்டும் ஒழித்தபாடில்லை. கார், பைக் தயாரிப்பு நிறுவனங்கள் என்னென்ன புது மாடல் வாகனங்கள் தயாரித்தாலும் அதை முதலில் வாங்குவதும் பெங்களூரு வாசிகள் தான். அதேபோல் வாகனங்கள் அதிகம் திருடப்படுவதும் பெங்களூருவில் தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.நாட்டில் உள்ள பீகார், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், வடகிழக்கு பகுதியில் உள்ள அசாம், தென் மாநிலங்களில் உள்ள ஒடிசா, தெலங்கானா, ஆந்திரா, தமிழகம், கேரள உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வருபவர்கள் தான் வாகன திருட்டில் ஈடுபடுகிறார்கள். பெங்களூரு ரயில், பஸ் நிலையங்கள், வடகிழக்கு, தெற்கு, மேற்கு போலீஸ் மண்டலங்களில் அதிகம் வாகன திருட்டு வழக்குகள் பதிவாகிறது. தனி மனிதராக பைக்கை திருடாமல் கும்பலாக ஈடுபடுகிறார்கள். இதனால் திருடப்படும் வாகனங்களை கண்டுப்பிடிப்பதில் போலீசாருக்கு சவாலாகி விடுகிறது. கடந்த 2017 முதல் 2021 வரை திருடுபோனதாக பதிவாகி உள்ள வாகனங்களில் 28.64% வாகனங்கள் மட்டுமே போலீசார் கண்டு பிடித்துள்ளனர். இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கண்டு பிடிக்கவில்லை. இதற்கு முன் பைக்குகள் திருடினால் அதை விற்பனை செய்து விடுவார்கள். அதை வாங்கும் உரிமையாளர்கள் எளிதில் போலீசாரிடம் சிக்கி கொள்வார்கள். இதனால் வாகனம் வாங்கியதற்கு பணம் கொடுப்பதுடன் திருட்டு வாகனம் வாங்கிய குற்றத்திற்காக சிறை தண்டனையும் அபரபாதமும் கட்ட வேண்டிய நிலை ஏற்படுவதால் தற்போது திருட்டு வாகனங்கள் யாரும் வாங்குவதில்லை. இதனால் திருடப்படும் பைக்குளை உடனடியாக தனி தனியாக பிரிக்கும் திருடர்கள், இன்ஜினை கழட்டி மீன் வண்டி, காய்கனிகள் வியாபாரம் செய்யும் வாகனங்கள் பயன்படுத்த விற்பனை செய்கிறார்கள். பெரும்பாலும் மீன் பாடிகளுக்கு அதிகம் பைக் இன்ஜின்கள் பொருத்தப்படுகிறது. மற்ற உதிரி பாகங்களை குஜரி கடை (பழைய) பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் விற்று விடுகிறார்கள். இதனால் வாகன திருடர்களுக்கும் குஜரி கடை உரிமையாளர்கள் இடையில் நல்ல, புரிந்துணர்வு உள்ளதாக போலீசார் தெரிவிக்கிறார்கள்.பெங்களூருவில் வாகன திருட்டில் ஈடுபட்டு சிக்குபவர்களில் ஆந்திரா மாநிலத்தில் உள்ள சித்தூர், ஆனந்தபூர் நகரங்களை சேர்ந்த பலர் உள்ளனர் என்று போலீசார் தெரிவிக்கிறார்கள். ரயில் மூலம் பெங்களூரு வரும் ஆந்திரா மாநில கும்பல் கோரமங்கல, மைக்கோ லே அவுட், கே.ஆர்.புரம், எச்.எஸ்.ஆர். லே அவுட், ஒயிட்பீல்ட், ஆகிய பகுதியில் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்படும் பைக்குகளின் ஹாண்டல்களை உடைப்பது அல்லது போலி சாவி பயன்படுத்தி திருடி செல்கின்றனர். திருடப்படும் வாகனங்களை மெயின் ரோட்டில் எடுத்து செல்லாமல் குறுக்கு வழியில் எடுத்து சென்று குஜரி கடையில் விற்பனை செய்கின்றனர். கேரள மாநிலம், கோட்டயம் பகுதியில் இருந்து வரும் வாகன திருடர்கள், பைக்குகளை திருடி சிவாஜிநகர், கே.ஆர்.மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குஜரி கடைகளில் உதிரி பாகங்களை விற்பனை செய்வதுடன் இன்ஜின்களை கேரள மாநிலத்தின் கடலோர பகுதியில் மீன் வியாரபாரம் செய்பவர்களின் மீன்பாடி வாகனங்களுக்கு பயன்படுத்த விற்பனை செய்கிறார்கள். கோலார், சீனிவாசபுா, பாகேபள்ளி, பாவகட, ஷிட்லகட்டா ஆகிய கர்நாடக மாநில தாலுகாக்கள் மட்டுமில்லாமல் ஆந்திரா மாநிலத்தின் சித்தூர் மற்றும் தமிழகதத்தின் சில குக்கிராமங்களில் பெங்களூருவில் திருடப்படும் வாகனங்கள் பயன்படுத்தி வருவதாகவும் போலீசார் நடத்தியுள்ள விசாரணையில் தெரியவந்துள்ளது. மாநகரில் வாகனங்கள் திருடும் குற்றத்தில் இன்ஜினியரிங், டிம்ப்ளமா, டிகிரி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அதிகம் கைது செய்யப்படுகிறார்கள். ஆடம்பரமாக செலவு செய்வதற்கு பணம் தேவைப்படுவதால் வாகன திருட்டில் ஈடுபடுகிறார்கள். சிலர் நல்ல நல்ல பைக் ஓட்ட வேண்டும் என்ற ஆசையில் ராயல் என்பீல்ட், கேடிஎம் டியூக், பல்சர் உள்ளிட்ட வாகனங்கள் திருடி பயன்படுத்தி சிக்கிக்கொள்கிறார்கள். மாநகரில் திருடும் பைக்குகளை குடகு, நந்திமலை, ஒகேனக்கல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு எடுத்து செல்கிறார்கள். சிலர் சாகசம் செய்வதற்காக திருட்டு வாகனங்களை பயன்படுத்துவது தெரியவந்து உள்ளது. மாநகரில் பைக்குகளில் ராயல் என்பீல்ட்கள் தான் அதிகம் திருடப்படுவது போலீஸ் நிலையங்களில் பதிவாகியுள்ள வழக்குகள் மூலம் தெரியவருகிறது. சில சமூக விரோதகளில் கொலை, கொள்ளை, செயின் பறிப்பு, வழிப்பறி, வீடு திருட்டு, குண்டு வெடிப்பு உள்பட சில சமூக குற்றங்கள் செய்வதற்காக பைக் உள்ளிட்ட வாகனங்களை திருடி பயன்படுத்துவதாக போலீசார் தெரிவிக்கிறார்கள். பைக் திருட்டுகளை தடுக்க பெங்களூரு போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?

மூலக்கதை