கொரோனா நிவாரண பணிக்காக பட்ஜெட்டில் சிறப்பு நிதி அரசு ஒதுக்க வேண்டும்: டி.கே.சிவகுமார் வேண்டுகோள்

தினகரன்  தினகரன்
கொரோனா நிவாரண பணிக்காக பட்ஜெட்டில் சிறப்பு நிதி அரசு ஒதுக்க வேண்டும்: டி.கே.சிவகுமார் வேண்டுகோள்

பெங்களூரு: கொரோனா நிவாரண பணிகள் மேற்கொள்வதற்காக வரும் நிதியாண்டு பட்ஜெட்டில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று டி.கே.சிவகுமார் வலியுறுத்தி உள்ளார். பெங்களூரு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நாட்டை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்க்க நாம் அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டும். இந்த விஷயத்தில் பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் எடுக்கும் முயற்சிக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் முழு ஆதரவும், ஒத்துழைப்பும் கொடுக்கும். மாநிலத்தில் கொரோனா நோயை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அதற்காக அரசுக்கு எந்தெந்த வழியில் ஒத்துழைப்பு கேட்டாலும் கொடுக்க தயாராக உள்ளோம். அதற்காகதான் நாங்கள் நடத்திய பாதயாத்திரையை கூட தற்காலிகமாக நிறுத்தி உள்ளோம். நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் மட்டும் சிகிச்சை வசதி செய்யாமல் தனியார் மருத்துவமனைகளிலும் செய்ய வேண்டும். இந்நோயால் பாதிக்கப்படுவோருக்கு ஒன்றிய, மாநில அரசு இணைந்து செயல்படுத்தி வரும் ஆயுஸ்மான் பாரத் திட்டத்தில் சேர்த்து சிகிச்சைக்கான செலவுகள் செய்ய வேண்டும். இதன் மூலம் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கிடைக்கும்.  தனியார் மருத்துவமனைகளும் அரசின் மூலம் பீஸ் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிறப்பான சிகிச்சை அளிப்பார்கள்.கொரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தி வரும் வார இறுதி ஊரடங்கு ஏழை, நடுத்தர வர்க்கத்தினரை அதிகம் பாதித்துள்ளது. குறிப்பாக அமைப்புச்சாரா தொழில் பிரிவில் பணியாற்றி வரும் கட்டுமான தொழில், பெயின்டிங், டையில்ஸ் பதிப்பு, தார்ச்சாலை அமைத்தல், சென்டரிங், பார் பைட்டிங், வீட்டு வேலை செய்வோர். குத்தகை துப்புரவு தொழிலாளர்கள், எலக்ட்ரீசியன், ஆட்டோ ஓட்டுநர்கள், பெட்டிகடை நடத்துவோர், தினகூலி தொழிலாளர்கள், வியாபாரிகள், நடைப்பாதையில் வியாபாரம் செய்வோர் உள்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  வருமானமில்லாமல் கஷ்டப்படும் குடும்பங்களின் பக்கம் மாநில அரசு நிற்க வேண்டும்.பொதுவாக சிறு வியாபாரம் செய்வோர் கடன் பெற்றுதான் வியாபாரம் செய்கிறார்கள். அவர்கள் கடனை திருப்பி செலுத்த காலவகாசம் கொடுக்க வேண்டும். அதேபோல் வியாபாரிகள், வாகன உரிமையாளர்கள் உள்பட தொழில் பிரிவில் உள்ளவர்கள் வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கி உள்ள கடன் மற்றும் வட்டியை திருப்பி செலுத்துவதற்கான காலகெடுவை தளர்த்த வேண்டும். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கொரோனா நிவாரண பணிகள் மேற்கொள்வதற்காக வரும் நிதியாண்டு பட்ஜெட்டில் ஒன்றிய  மற்றும் மாநில அரசுகள் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை