டிராவிஸ் ஹெட் சதம்: மீண்டது ஆஸ்திரேலியா | ஜனவரி 14, 2022

தினமலர்  தினமலர்
டிராவிஸ் ஹெட் சதம்: மீண்டது ஆஸ்திரேலியா | ஜனவரி 14, 2022

ஹோபர்ட்: இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் ஐந்தாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் சதம் விளாசினார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டிகளில் முடிவில் ஆஸ்திரேலியா 3–0 என, ஏற்கனவே தொடரை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. ஹோபர்ட்டில் ஐந்தாவது டெஸ்ட் நடக்கிறது. பகலிரவு ஆட்டமாக நடக்கும் இப்போட்டியில் ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

 

ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் (0), உஸ்மான் கவாஜா (6) ஜோடி ஏமாற்றியது. ராபின்சன் ‘வேகத்தில்’ ஸ்டீவ் ஸ்மித் (0) வெளியேறினார். ஆஸ்திரேலிய அணி 12 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின் இணைந்த மார்னஸ் லபுசேன், டிராவிஸ் ஹெட் ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. நான்காவது விக்கெட்டுக்கு 71 ரன் சேர்த்த போது ஸ்டூவர்ட் பிராட் பந்தில் லபுசேன் (44) போல்டானார். அபாரமாக ஆடிய டிராவிஸ் ஹெட், டெஸ்ட் அரங்கில் தனது 4வது சதமடித்தார். இவர், 101 ரன்னில் (12 பவுண்டரி) கிறிஸ் வோக்ஸ் பந்தில் அவுட்டானார். பொறுப்பாக ஆடிய கேமிரான் கிரீன் (74), தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார்.

 

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்கு 241 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட, முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. அலெக்ஸ் கேரி (10), ஸ்டார்க் (0) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராட், ராபின்சன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

மூலக்கதை