புஜாரா, ரகானேவுக்கு மாற்று யாரு: கவாஸ்கர் கணிப்பு | ஜனவரி 14, 2022

தினமலர்  தினமலர்
புஜாரா, ரகானேவுக்கு மாற்று யாரு: கவாஸ்கர் கணிப்பு | ஜனவரி 14, 2022

மும்பை: ‘‘டெஸ்ட் அணியில் புஜாரா, ரகானேவுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி களமிறக்கப்படலாம்,’’ என, கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய மண்ணில் இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் வரும் பிப். 25ல் பெங்களூருவில் துவங்குகிறது. இத்தொடருக்கான இந்திய அணியில் ‘பார்மின்றி’ தவிக்கும் புஜாரா, அஜின்கியா ரகானே நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஏனெனில் சமீபத்தில் முடிந்த தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இவர்கள் மோசமாக விளையாடினர். ரகானே 136 (சராசரி 22.66), புஜாரா 124 (சராசரி 20.66) ரன் மட்டுமே எடுத்தனர்.

 

புஜாரா, ரகானேவுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி சேர்க்கப்படலாம். சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஸ்ரேயாஸ், ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 202 ரன் எடுத்தார். இதுவரை 13 டெஸ்டில் (684 ரன், ஒரு சதம், 4 அரைசதம்) விளையாடி உள்ள விஹாரி, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஜோகனஸ்பர்க் டெஸ்டில் (20, 40* ரன்) ஓரளவு கைகொடுத்தார்.

 

இதுகுறித்து இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறுகையில், ‘‘இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புஜாரா, ரகானே நீக்கப்படலாம். ஏனெனில் தென் ஆப்ரிக்க தொடரில் இவர்களது செயல்பாடு சிறப்பாக இல்லை. எனவே இந்திய ‘லெவன்’ அணியில் இரண்டு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி தேர்வு செய்யப்படலாம். இதில் விஹாரி 3வது இடத்திலும், ஸ்ரேயாஸ் 5வது இடத்திலும் களமிறங்க வேண்டும். தேர்வுக்குழுவினரின் முடிவை பொறுத்திருந்து பார்ப்போம்,’’ என்றார்.

மூலக்கதை