நாடாளுமன்ற ஊழியர்கள் மேலும் 300 பேருக்கு கொரோனா

தினகரன்  தினகரன்
நாடாளுமன்ற ஊழியர்கள் மேலும் 300 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: நாடாளுமன்ற ஊழியர்களில் மேலும் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த 9ம் தேதி நிலவரப்படி ஏற்கனவே, 400 ஊழியர்களுக்கு தொற்று உறுதியான நிலையில், மேலும் 300 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது.இதுவரையிலும், மொத்தம் 718 நாடாளுமன்ற ஊழியர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 204 பேர் மாநிலங்களவை செயலகத்தை சேர்ந்தவர்களாவர்.  இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டை ஆய்வு செய்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவை, மாநிலங்களவை எம்பி.க்கள், ஊழியர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.இந்நிலையில், நாடாளுமன்ற ஊழியர்களில் மேலும் 300 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் தொற்று தொடர்ந்து பரவி வருவதால் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இருவரும் கவலை தெரிவித்தனர். மேலும் இரு அவைகளின் செயலர்களையும் தேவையான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி வலியுறுத்தினர்.கார்கேவுக்கு தொற்று: ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இவரது டெல்லி அலுவலக ஊழியர்கள் 5 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கர்நாடகாவில் நடந்த மேகதாது பாதயாத்திரையில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒடிசா பாஜ எம்எல்ஏ 3வது முறை பாதிப்பு: ஒடிசா மாநிலம்  பலாசோர் மாவட்டத்தில் உள்ள நிலகிரி தொகுதியின் பாஜ எம்எல்ஏ சுகந்த நாயக் 3வது முறையாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஏற்கனவே, கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் இரண்டு முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவருடைய சளி மாதிரியை ஆய்வுக்கு அனுப்பியதில் அவருக்கு 3வது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

மூலக்கதை