உ.பி தேர்தலில் போட்டியிடும் 125 காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: உன்னாவ் பலாத்கார சிறுமியின் தாய்க்கு டிக்கெட்

தினகரன்  தினகரன்
உ.பி தேர்தலில் போட்டியிடும் 125 காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: உன்னாவ் பலாத்கார சிறுமியின் தாய்க்கு டிக்கெட்

புதுடெல்லி: உ.பி. சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 125 வேட்பாளர்களின் பட்டியலை முதல் கட்டமாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதில் உன்னாவில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் தாய்க்கு தேர்தல் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. உ.பியில் அடுத்த மாதம் 10ம் தேதி தொடங்கி மார்ச் 7 வரை 7 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வில் மும்முரம் காட்டிவருகின்றன. இதற்கிடையில் காங்கிரஸ் முதற்கட்டமாக 125 வேட்பாளர்களை நேற்று அறிவித்தது. இதில் 50 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் உன்னாவில் பலாத்காரத்துக்கு ஆளான சிறுமியின் தாய்க்கும் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் டிக்கெட் வழங்கியுள்ளது.இது குறித்து காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி நிருபர்களிடம் கூறியதாவது: ‘40 சதவீதம் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெண்கள். 40 சதவீத வேட்பாளர்கள் இளைஞர்கள். இவர்களை ஆட்சி அதிகாரத்தின் ஒரு பகுதியாக கொண்டுவர காங்கிரஸ் விரும்புகிறது.’ என்றார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டிவிட்டரில்,‘உன்னாவில் ஒரு தாயின் மகளுக்கு பாஜ அநீதி இழைத்தது. தற்போது அந்த தாய் நீதியின் முகமாக ஆகிவிட்டார். போராடுவோம், வெல்வோம்.’ என குறிப்பிட்டுள்ளார். இதே போன்று பகுஜன் சமாஜ் கட்சியும் 300 வேட்பாளர்களை இறுதி செய்துள்ளது. இதில் 90 பேர் தலித் வகுப்பை சேர்ந்தவர்கள் என்று அக்கட்சியின் பொது செயலாளர் எஸ்.சி.மிஸ்ரா கூறினார்.

மூலக்கதை