உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள் விலகல்: மேலும் ஒரு அமைச்சர், எம்எல்ஏ ராஜினாமா

தினகரன்  தினகரன்
உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள் விலகல்: மேலும் ஒரு அமைச்சர், எம்எல்ஏ ராஜினாமா

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் அடுத்த மாதம் 10ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டப்பேரவை  தேர்தல் நடக்க உள்ளது.   இந்நிலையில், யோகி அரசில் கேபினட் அமைச்சராக இருந்த சுவாமி பிரசாத் மவுர்யா ராஜினாமா செய்தார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகினார். அவரை தொடர்ந்து, அவரது ஆதரவு எம்எல்ஏக்கள்  3 பேரும் கட்சியில் இருந்து விலகினர். நேற்று முன்தினம் தாராசிங் சவுகான் என்ற அமைச்சரும் ஒரு எம்எல்ஏவும் ராஜினாமா செய்தனர். இவர்களை தொடர்ந்து, அமைச்சர் தரம் சிங் சைனி,எம்எல்ஏ வினய் சக்கியா ஆகியோர் நேற்று ராஜினாமா செய்தனர். இதனால், 3 நாளில் பாஜவில் இருந்து விலகிய அமைச்சர்,எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 8 ஆகி உள்ளது. ஆதித்யநாத்துக்கு அயோத்தி: முதல் கட்ட சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பாஜ கட்சியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடப்பதாக இருந்தது. ஆனால், கட்சி அலுவலக ஊழியர்கள் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்,மூலம் கூட்டம் நேற்று நடந்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா,ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங்,நிதின் கட்காரி உள்ளிட்டோர் காணொலி வாயிலாக பங்கேற்றனர். இதுகுறித்து வட்டாரங்கள் கூறுகையில், ‘உபி தேர்தலில் ,172 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து இறுதி செய்யப்பட்டது.   முதல்வர் ஆதித்யநாத், துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுர்யா,தினேஷ் சர்மாவை தேர்தல் களத்தில் நிறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆதித்யநாத் அயோத்தி,கேசவ் பிரசாத் சிரத்து தொகுதி, சர்மா லக்னோ நகரில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியிலும் போட்டியிடுவர். விரைவில் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் ’ என்றன.

மூலக்கதை