இடம் மாறும் ஐ.பி.எல்., தொடர் * தென் ஆப்ரிக்காவில் நடத்த திட்டம் | ஜனவரி 13, 2022

தினமலர்  தினமலர்
இடம் மாறும் ஐ.பி.எல்., தொடர் * தென் ஆப்ரிக்காவில் நடத்த திட்டம் | ஜனவரி 13, 2022

புதுடில்லி: ஐ.பி.எல்., தொடரின் 15வது சீசனை அன்னிய மண்ணில் நடத்த திட்டமிட்டு வருகின்றனர். 

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் ஐ.பி.எல்., ‘டி–20’ தொடர் நடத்தப்படுகிறது. இதன் 13வது சீசன் முழுவதும், 14வது சீசனில் பாதி போட்டிகளும் எமிரேட்சில் நடத்தப்பட்டன. 15வது சீசனில் 10 அணிகள் பங்கேற்க உள்ள நிலையில் இந்தியாவின் 10 நகரங்களில் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் நடத்த திட்டமிட்டனர். பின் மகாராஷ்டிராவின் மூன்று மைதானங்களில் மட்டும் நடத்தலாம் என முடிவு செய்தனர்.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பரவல் அதிவேகமாக உள்ளது. நாட்டில் அதிகபட்ச பாதிப்பு மகாராஷ்டிராவில் தான் உள்ளது. இதனால் இங்கு 15வது தொடரை நடத்துவது சரியாக இருக்காது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

தவிர அடுத்த இரு மாதத்தில் கொரோனா பரவல் முடிவுக்கு வரும் என உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது. இதனால் புதிய முயற்சியாக இலங்கை அல்லது தென் ஆப்ரிக்காவில் நடத்த பி.சி.சி.ஐ., திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., தரப்பில் ஒருவர் கூறியது:

ஒவ்வொரு முறையும் எமிரேட்சை மட்டும் நாங்கள் சார்ந்திருக்க முடியாது. வேறு என்ன வழிகள் உள்ளன என பார்த்து முடிவு எடுப்போம். கடந்த சில ஆண்டுகளாக இந்திய வீரர்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்ற போது ஒட்டல் அறைகளில் மட்டும் முடங்கி கிடந்தனர். இந்நிலையில் தென் ஆப்ரிக்காவின் ஜோகனஸ்பர்க் மைதானம் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்தது, வீரர்களுக்கு நல்ல வசதியாக இருந்தது. தவிர தென் ஆப்ரிக்காவின் நேர வித்தியாசம், வீரர்களுக்கு சரியாக இருக்கும் என்பதால் அங்கு ஐ.பி.எல்., தொடரை நடத்துவது குறித்து யோசித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை