ஆஸி.,யின் ஆதிக்கம் தொடருமா * இன்று இங்கிலாந்துடன் 5வது டெஸ்ட் | ஜனவரி 13, 2022

தினமலர்  தினமலர்
ஆஸி.,யின் ஆதிக்கம் தொடருமா * இன்று இங்கிலாந்துடன் 5வது டெஸ்ட் | ஜனவரி 13, 2022

ஹோபர்ட்: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் ஐந்தாவது டெஸ்ட் இன்று துவங்குகிறது.

ஆஸ்திரேலியா சென்ற இங்கிலாந்து அணி பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலிய அணி தொடரை 3–0 என கைப்பற்றியது. சிட்னியில் நடந்த நான்காவது டெஸ்ட் ‘டிரா’ ஆனது.  இரு அணிகள் மோதும் ஐந்தாவது, கடைசி டெஸ்ட் இன்று ஹோபர்ட்டில் துவங்குகிறது. 

கவாஜா துவக்கம்

இரண்டு ஆண்டுக்குப் பின் டெஸ்ட் அணிக்கு திரும்பிய கவாஜா, சிட்னி டெஸ்டில் ‘மிடில் ஆர்டரில்’ களமிறங்கி இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசி மிரட்டினார். இதையடுத்து கடைசி டெஸ்டில் வார்னருடன் (273 ரன்) இணைந்து கவாஜா (238) துவக்க வீரராக களமிறங்க காத்திருக்கிறார். கொரோனாவில் இருந்து மீண்ட டிராவிஸ் ெஹட் (248) மீண்டும் அணிக்கு திரும்புகிறார். ‘மிடில் ஆர்டரில்’ லபுசேன் (286), ஸ்மித் (217) கூட்டணி அணியின் பேட்டிங்கிற்கு பலம் சேர்க்கிறது. 

சம பலத்தில்

பந்துவீச்சை பொறுத்தவரையில் ‘வேகத்தில்’ மிட்சல் ஸ்டார்க் அதிகபட்சம் 15 விக்கெட் சாய்த்து மிரட்டுகிறார். இவருக்கு கேப்டன் கம்மின்ஸ் (15), காயத்தால் அவதிப்படும், புதிய வரவு போலண்ட் (14) சம பலத்தில் கைகொடுக்கின்றனர்.  ‘சுழலில்’ நாதன் லியான் 16 விக்கெட் சாய்த்து  இங்கிலாந்துக்கு தொல்லை தருகிறார். 

ஆறுதல் பெறுமா

இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஜோ ரூட் இதுவரை 277 ரன் எடுத்து  பெரிதும் கைகொடுக்கிறார். இவருக்கு ‘ஆல் ரவுண்டர்’ ஸ்டோக்ஸ் (227), டேவிட் மலான் (209) பெரிதும் உதவியாக உள்ளனர். கடந்த டெஸ்டில் சதம் அடித்த பேர்ஸ்டோவ், காயத்தால் அவதிப்படுவது கூடுதல் பின்னடைவு. இருப்பினும் பேட்டர்கள் என்ற வகையில் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோவ் இன்று களமிறங்கலாம்.

பந்துவீச்சில் ஆண்டர்சன் (8 விக்.,), மார்க் உட் (8), ராபின்சன் (9), ஸ்டூவர்ட் பிராட் (7) என பலர் இருந்தாலும் சீராக திறமை வெளிப்படுத்தாதது ஏமாற்றம். கடந்த டெஸ்டில் கடைசி நிமிடம் வரை போராடி ‘டிரா’ செய்த இங்கிலாந்து, இம்முறை ஆறுதல் வெற்றிக்கு முயற்சிக்கலாம். 

மூலக்கதை