சாதிக்குமா இளம் இந்தியா: உலக கோப்பை கிரிக்கெட்டில்... | ஜனவரி 13, 2022

தினமலர்  தினமலர்
சாதிக்குமா இளம் இந்தியா: உலக கோப்பை கிரிக்கெட்டில்... | ஜனவரி 13, 2022

கயானா: ஜூனியர் உலக கோப்பை (19 வயது) கிரிக்கெட் தொடர் இன்று துவங்குகிறது. இதில் யாஷ் துல் தலைமையிலான இளம் இந்திய அணி கோப்பை வென்று சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை (50 ஓவர்) தொடரின் 14வது சீசன் முதன்முறையாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இன்று முதல் வரும் பிப். 5 வரை நடக்கவுள்ளது.

 

16 அணிகள்: இதில் இந்தியா, ‘நடப்பு சாம்பியன்’ வங்கதேசம், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 16 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்து அணி விலகியதால், ஸ்காட்லாந்து அணி பங்கேற்கிறது. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு (ஜன. 26–29) முன்னேறும். இதில் வெற்றி பெறும் அணிகள் வரும் பிப். 1–2ல் ஆன்டிகுவாவில் நடக்கவுள்ள அரையிறுதியில் மோதும். பைனல், பிப். 5ல் ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்டு மைதானத்தில் நடக்கவுள்ளது.

 

நான்கு பிரிவு: இந்திய அணி, ‘பி’ பிரிவில் அயர்லாந்து, தென் ஆப்ரிக்கா, உகாண்டா அணிகளுடன் இடம் பிடித்துள்ளது. இந்திய அணி, தனது முதல் போட்டியில் நாளை தென் ஆப்ரிக்காவை (இடம்: கயானா) சந்திக்கிறது. அதன்பின் அயர்லாந்து (ஜன. 19, இடம்: டிரினிடாட்), உகாண்டா (ஜன. 22, இடம்: டிரினிடாட்) அணிகளை எதிர்கொள்கிறது. ‘ஏ’ பிரிவில் வங்கதேசம், கனடா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ‘சி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பப்புவா நியூ கினியா, ஜிம்பாப்வே, ‘டி’ பிரிவில் ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து, இலங்கை, விண்டீஸ் அணிகள் இடம் பெற்றுள்ளன.

 

யாஷ் நம்பிக்கை: நான்கு முறை கோப்பை வென்ற இந்திய அணி, சமீபத்தில் ஆசிய கோப்பை வென்ற உற்சாகத்தில் உள்ளது. இத்தொடருக்கான பயிற்சி போட்டிகளில் விண்டீஸ், ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. பேட்டிங்கில் கேப்டன் யாஷ் துல், ஹர்னுார் சிங், ஷேக் ரஷீத் பலம் சேர்க்கின்றனர். பவுலிங்கில் ரவிக்குமார், ராஜ்யவர்தன் நம்பிக்கை தருகின்றனர். ஆங்கிரிஸ், ஆராத்யா, நிஷாந்த், டாம்பே, மானவ் உள்ளிட்ட மற்றவர்கள் கைகொடுக்கும் பட்சத்தில் ஐந்தாவது முறையாக கோப்பை வென்று சாதிக்கலாம்.

இதுவரை சாம்பியன்

ஜூனியர் உலக கோப்பை (19 வயது) வரலாற்றில் இந்திய அணி அதிகபட்சமாக நான்கு முறை (2000, 2008, 2012, 2018) கோப்பை வென்றுள்ளது. ஆஸ்திரேலியா 3 (1988, 2002, 2010), பாகிஸ்தான் 2 (2004, 2006), வங்கதேசம் (2020), தென் ஆப்ரிக்கா (2014), விண்டீஸ் (2016), இங்கிலாந்து (1998) அணிகள் தலா ஒரு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.

மூலக்கதை