ரிஷாப் பன்ட் அசத்தல் சதம்: முன்னிலை பெற்றது இந்தியா | ஜனவரி 13, 2022

தினமலர்  தினமலர்
ரிஷாப் பன்ட் அசத்தல் சதம்: முன்னிலை பெற்றது இந்தியா | ஜனவரி 13, 2022

கேப்டவுன்: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் ரிஷாப் பன்ட் சதம் விளாச இந்திய அணி 211 ரன் முன்னிலை பெற்றது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்டில் தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெற, தொடர் 1–1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் கேப்டவுனில் நடக்கிறது. இதன் முதல் இன்னிங்சில் இந்தியா 223, தென் ஆப்ரிக்கா 210 ரன் எடுத்தனது. இரண்டாம் நாள் முடிவில், இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 57 ரன் எடுத்திருந்தது. புஜாரா (9), கோஹ்லி (14) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

புஜாரா ஏமாற்றம்: மூன்றாம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்தியாவின் புஜாரா (9), ஜான்சென் ‘வேகத்தில்’ வெளியேறினார். அடுத்து வந்த அஜின்கியா ரகானே (1), ரபாடாவிடம் சரணடைந்தார். இந்திய அணி 58 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

 

பொங்கல் பரிசு: பின் இணைந்த கேப்டன் விராத் கோஹ்லி, ரிஷாப் பன்ட் ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. ஒருபுறம் கோஹ்லி நிதானமாக விளையாடினார். மறுமுனையில் அசத்திய ரிஷாப் பன்ட், ரபாடா பந்தை பவுண்டரிக்கு அனுப்பி தனது ரன் கணக்கை துவக்கினார். பொறுப்பாக ஆடிய ரிஷாப் பன்ட், கேஷவ் மஹாராஜ் வீசிய 48வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர் பறக்கவிட்டார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 94 ரன் சேர்த்திருந்த போது லுங்கிடி ‘வேகத்தில்’ கோஹ்லி (29) வெளியேறினார்.

 

தொடர்ந்து மிரட்டிய லுங்கிடி பந்தில் அஷ்வின் (7), ஷர்துல் தாகூர் (5) அவுட்டாகினர். ஆலிவர் வீசிய 58வது ஓவரின் கடைசி இரு பந்தில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார் ரிஷாப் பன்ட். அடுத்து வந்த உமேஷ் யாதவ், முகமது ஷமி ‘டக்–அவுட்’ ஆகினர். விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும் தென் ஆப்ரிக்க பந்துவீச்சை வெளுத்துவாங்கிய  ரிஷாப் பன்ட், டெஸ்ட் அரங்கில் தனது 4வது சதத்தை பதிவு செய்து ரசிகர்களுக்கு பொங்கல் பரிசு தந்தார். ஜான்சென் பந்தில் பும்ரா (2) ஆட்டமிழந்தார்.

இரண்டாவது இன்னிங்சில் 198 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆன இந்திய அணி, 211 ரன் முன்னிலை பெற்றது. பன்ட் (100 ரன், 4 சிக்சர், 6 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார். தென் ஆப்ரிக்கா சார்பில் ஜான்சென் 4, ரபாடா, லுங்கிடி தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

சுலப இலக்கு: பின், 212 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு மார்க்ரம் (16) சோபிக்கவில்லை. பின் இணைந்த கேப்டன் டீன் எல்கர், கீகன் பீட்டர்சன் ஜோடி இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு 78 ரன் சேர்த்த போது பும்ரா பந்தில் எல்கர் (30) அவுட்டானார்.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், 2வது இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 2 விக்கெட்டுக்கு 101 ரன் எடுத்து, 111 ரன் பின்தங்கி இருந்தது. பீட்டர்சன் (48) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் பும்ரா, ஷமி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

ஏழாவது முறை

இந்தியாவின் புஜாரா, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 9 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். மூன்றாம் நாளில் களமிறங்கிய இவர், கூடுதலாக ரன் எதுவும் எடுக்காமல் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் அதிகபட்சமாக 7வது முறையாக முந்தைய நாள் எடுத்திருந்த ரன்னுடன் கூடுதலாக ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். நியூசிலாந்தின் கிறிஸ் கெய்ர்ன்ஸ், தென் ஆப்ரிக்காவின் காலிஸ் தலா 6 முறை இப்படி அவுட்டாகி இருந்தனர்.

 

சூப்பர் ஜோடி

ஐந்தாவது விக்கெட்டுக்கு கோஹ்லி, ரிஷாப் பன்ட் ஜோடி 94 ரன் சேர்த்திருந்தது. இதன்மூலம் தென் ஆப்ரிக்க மண்ணில் நடந்த டெஸ்டில் 5வது விக்கெட்டுக்கு அதிக ரன் சேர்த்த இந்திய ஜோடி வரிசையில் இரண்டாவது இடம் பிடித்தது. முதலிடத்தில் சச்சின்–சேவக் ஜோடி (220 ரன், இடம்: புளோயம்போன்டைன், 2001–02) உள்ளது.

 

முதல் விக்கெட் கீப்பர்

அபாரமாக ஆடிய ரிஷாப் பன்ட், தென் ஆப்ரிக்க மண்ணில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன், இந்தியாவின் தோனி 90 ரன் (இடம்: செஞ்சுரியன், 2010–11) எடுத்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.

மூலக்கதை