மீண்டும் சரிவு பாதையில் தங்க நகைகள் விற்பனை

தினமலர்  தினமலர்
மீண்டும் சரிவு பாதையில் தங்க நகைகள் விற்பனை

புதுடில்லி:தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக, தங்கத்தின் தேவை மீண்டும் சரிவை காணத் துவங்கி உள்ளது.
கடந்த ஆண்டின் முதல் பாதியில், தங்கம் விற்பனை கடும் சரிவைக் கண்ட நிலையில், இரண்டாவது பாதியில் மீட்சியை காணத் துவங்கியது.இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க துவங்கியதை அடுத்து, தங்கம் விற்பனை, சரிவு பாதைக்கு திரும்ப துவங்கி உள்ளது.
தொற்று காரணமாக, திருமண நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டு வருவதால், இந்தியாவில் தங்கத்துக்கான தேவையில் பெருமளவு சரிவு ஏற்பட்டு வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, அகில இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் கவுன்சிலின் தலைவர் அஷிஷ் பெத்தே கூறியதாவது:சில்லரை விற்பனையை பொறுத்தவரை, கடைகளுக்கு வந்து செல்வோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. காரணம் தொற்று குறித்து மக்கள் சிறிது கவலை கொண்டிருக்கிறார்கள்.
இருப்பினும், தற்போதைய தொற்று முன்பை விட குறைவான பாதிப்புடையதாக இருப்பது சற்று நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.மேலும் கடைகள் முழுமையாக அடைக்கப் படாமல், திறந்து வைத்து கொள்ளும் அளவில் கட்டுப்பாடுகள் உள்ளதும், ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.

மூலக்கதை