ஐந்து விக்கெட் சாய்த்தார் பும்ரா * இந்திய அணி முன்னிலை | ஜனவரி 12, 2022

தினமலர்  தினமலர்
ஐந்து விக்கெட் சாய்த்தார் பும்ரா * இந்திய அணி முன்னிலை | ஜனவரி 12, 2022

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தற்போது தொடர் 1–1 என சம நிலையில் உள்ளது.

இரு அணிகள் மோதும் மூன்றாவது, கடைசி டெஸ்ட் கேப்டவுனில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 223 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் முதல் இன்னில்சில் தென் ஆப்ரிக்க அணி 1 விக்கெட்டுக்கு 17 ரன் எடுத்து 206 ரன் பின்தங்கி இருந்தது. மார்க்ரம் (8), மஹராஜ் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

பும்ரா நம்பிக்கை

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. முதல் ஓவரை வீசினார் பும்ரா. இவரது 2வது பந்தில் மார்க்ரம் (8) போல்டானார். மறுபக்கம் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த ‘நைட் வாட்ச்மேன்’ மஹராஜை (25) போல்டாக்கி அனுப்பி வைத்தார் உமேஷ் யாதவ். தென் ஆப்ரிக்க அணி 45/3 என திணறியது. நான்காவது விக்கெட்டுக்கு 67 ரன் எடுத்த போது உமேஷ் பந்தில் ஒருவழியாக துசென் (21) அவுட்டானார். பீட்டர்சன் டெஸ்ட் அரங்கில் இரண்டாவது அரைசதம் எட்டினார். பவுமா 17 ரன்னில் கொடுத்த ‘கேட்ச்’ வாய்ப்பை புஜாரா நழுவவிட்டு வெறுப்பேற்றினார்.

ஷமி ‘இரண்டு’

ஷமி வீசிய போட்டியின் 56 வது ஓவர் இந்திய ரசிகர்களுக்கு இனிப்பாக அமைந்தது. இதன் முதல் பந்தில் பவுண்டரி அடித்த பவுமாவை (28), அடுத்த பந்தில் அவுட்டாக்கினார் ஷமி. அடுத்து வந்த வெர்ரேனை, 2வது பந்தில் ‘டக்’ அவுட்டாக்கி, வெறுங்கையுடன் திருப்பி அனுப்பினார்.

மறுபக்கம் ஜான்செனை (7) போல்டாக்கினார் பும்ரா. மீண்டும் அசத்திய இவர், நீண்ட நேரம் தொல்லை கொடுத்த பீட்டர்சனை (72) வெளியேற்றினார். ரபாடா (15), ஷர்துலிடம் சிக்கினார். கடைசியில் லுங்கிடியை (3) அவுட்டாக்கினார் பும்ரா. தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 210 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆலிவியர் (10) அவுட்டாகாமல் இருந்தார். பும்ரா இத்தொடரில் இரண்டாவது முறையாக 5 விக்கெட் சாய்த்தார். தவிர முகமது ஷமி 2, உமேஷ் யாதவ் 2 விக்கெட் கைப்பற்றினர்.

திணறல் துவக்கம்

முதல் இன்னிங்சில் பெற்ற 13 ரன் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது. மயங்கர் அகர்வால் 7, ராகுல் 10 ரன்னுக்கு அவுட்டாகினர். இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 57 ரன் எடுத்து, 70 ரன் முன்னிலை பெற்றிருந்தது. கோஹ்லி (14), புஜாரா (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

7

டெஸ்ட் அரங்கில் நேற்று 7வது முறையாக ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கும் மேல் என விக்கெட் சாய்த்தார் இந்தியாவின் பும்ரா. இதில் தென் ஆப்ரிக்கா, விண்டீஸ், இங்கிலாந்தில் தலா 2 முறை, ஆஸ்திரேலியாவில் ஒரு முறை என இதுபோல அசத்தினார்.

 

100

தென் ஆப்ரிக்காவின் பவுமா அடித்த பந்தை பிடித்த இந்தியாவின் கோஹ்லி, டெஸ்ட் அரங்கில் 100 வது ‘கேட்ச்’ செய்து அசத்தினார். 99 டெஸ்டில் இந்த மைல்கல்லை எட்டினார். தவிர ஒருநாள் அரங்கில் 132, ‘டி–20’ ல் 42 ‘கேட்ச்’ செய்துள்ளார்.

* டெஸ்ட் அரங்கில் 100 அதற்கும் மேல் ‘கேட்ச்’ செய்த 6வது இந்திய வீரர் ஆனார் கோஹ்லி. டிராவிட் (209), லட்சுமண் (135), சச்சின் (115), கவாஸ்கர் (108), அசார் (105) முதல் 5 இடத்தில் உள்ளனர்.


ஜான்சென் ‘போல்டு

ஜோகனஸ்பர்க் டெஸ்ட் இரண்டாவது இன்னிங்சில் பும்ரா, தோளை தாக்கும் வகையில் பந்து வீசினார் தென் ஆப்ரிக்காவின் ஜான்சென். இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நேற்று ஜான்சென் களமிறங்கியதும் பும்ரா பந்து வீச வந்தார். பவுண்டரி எல்லைக்கு வெளியில் இருந்த சிராஜ், சகா உள்ளிட்ட இந்திய வீரர்கள் கைதட்டி பும்ராவுக்கு உற்சாகம் கொடுத்தனர். கடைசியில் ஜான்செனை போல்டாக்கி அசத்தினார் பும்ரா.

 

மூலக்கதை