‘வோடபோன் ஐடியா’வின் திட்டம் மத்திய அரசு ஏற்க மறுப்பு

தினமலர்  தினமலர்
‘வோடபோன் ஐடியா’வின் திட்டம் மத்திய அரசு ஏற்க மறுப்பு

புதுடில்லி:‘வோடபோன் ஐடியா’ நிறுவனம், அரசுக்கு வழங்க வேண்டிய பணத்துக்கு பதிலாக, பங்குகளை வழங்க தயாராக இருப்பதாக, கடந்த செவ்வாயன்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அரசாங்கம் நிறுவனத்தை நடத்த விரும்பவில்லை என தெளிவுபடுத்தி விட்டதாக, வோடபோன் ஐடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நேற்று தெரிவித்துள்ளார்.மேலும், தற்போதைய புரமோட்டர்களே, நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முழுமையாக உறுதிபூண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
கடனில் சிக்கி தவிக்கும், ‘வோடபோன் ஐடியா’ நிறுவனம், அரசுக்கு செலுத்த வேண்டிய வட்டி நிலுவை தொகையான 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பதிலாக, அதன் 35.8 சதவீத பங்குகளை வழங்க தயாராக இருப்பதாக, கடந்த செவ்வாய் அன்று தெரிவித்தது. இந்த முயற்சிக்கு வோடபோன் ஐடியாவின் நிர்வாக குழுவும் ஒப்புதல் அளித்திருந்தது.
பங்குகளாக மாற்றும் இந்த திட்டத்தை தொலைதொடர்பு துறை ஒப்புக் கொள்ளும் பட்சத்தில், வோடபோன் ஐடியா அதை நிறைவேற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.ஆனால், இந்த அறிவிப்பு வந்த மறுநாளே, தொலைதொடர்பு துறை இதை ஏற்க தயாராக இல்லை என தெரிவித்துவிட்டது.
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரவீந்தர் தக்கர் கூறியதாவது:எங்களுடைய இந்த திட்டத்தை, மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. நிறுவனத்தை நடத்த அரசு விரும்பவில்லை. இத்துறையில் மூன்று தனியார் நிறுவனங்கள் இருக்க வேண்டும் என்றும்; ஒன்றோ அல்லது இரண்டோ நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்த கூடாது என்றும் அரசு விரும்புகிறது.
பங்குகளை வழங்குவது குறித்து தொலைதொடர்பு துறை எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. தற்போது இருக்கும் புரமோட்டர்கள் நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவார்கள்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் மொத்த கடன், தற்போது கிட்டத்தட்ட 1.95 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. தொலைதொடர்பு துறையில், மூன்று தனியார் நிறுவனங்கள் இருக்க வேண்டும் என்றும்; ஒன்றோ அல்லது இரண்டோ நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தவதாக அமைந்துவிடக் கூடாது என்றும் அரசு விரும்புகிறது.

மூலக்கதை