ஜெயந்த் யாதவ் தேர்வு: வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக | ஜனவரி 12, 2022

தினமலர்  தினமலர்
ஜெயந்த் யாதவ் தேர்வு: வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக | ஜனவரி 12, 2022

புதுடில்லி: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஜெயந்த் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. முதல் போட்டி வரும் ஜன. 19ல் பார்ல் நகரில் நடக்கவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த தமிழக ‘ஆல்–ரவுண்டர்’ வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் இவர், இத்தொடரில் இருந்து விலகினார்.

ஏற்கனவே ஒருநாள் தொடரில் ‘ஆல்–ரவுண்டர்’ ரவிந்திர ஜடேஜா, அக்சர் படேல் காயத்தால் பங்கேற்காத நிலையில் தற்போது வாஷிங்டன் சுந்தரும் விலகினார். இதனையடுத்து டெஸ்ட் தொடருக்காக தென் ஆப்ரிக்கா சென்றுள்ள சுழற்பந்துவீச்சாளர் ஜெயந்த் யாதவ், வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ஜெயந்த் யாதவ், இதுவரை ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடி உள்ளார். கடந்த 2016ல் விசாகப்பட்டினத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். ஒருநாள் தொடருக்கு இவர் தேர்வானாலும், ‘லெவன்’ அணியில் இடம் கிடைப்பது சந்தேகம். ஏனெனில் ஏற்கனவே அணியில் தமிழகத்தின் அஷ்வின், வெங்கடேஷ் ஐயர், யுவேந்திர சகால் போன்ற ‘சுழல்’ வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

மூலக்கதை