நாகாலாந்து துப்பாக்கிச்சூடு விவகாரம்: அமித்ஷாவின் விளக்கம் திருப்தியளிக்கவில்லை எனக் கூறி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!

தினகரன்  தினகரன்
நாகாலாந்து துப்பாக்கிச்சூடு விவகாரம்: அமித்ஷாவின் விளக்கம் திருப்தியளிக்கவில்லை எனக் கூறி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!

டெல்லி: நாகாலாந்து மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் விளக்கம் திருப்தியளிக்கவில்லை எனக் கூறி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளது. நாகாலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டத்தில் உள்ள ஓட்டிங் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை (04.12.2021) இரவு, தீவிரவாதிகள் என நினைத்து அப்பாவி இளைஞர்கள் மீது பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில், ஒரு பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். அதே நேரத்தில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த விவாகரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பி விளக்கம் கேட்டு அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து மக்களவையில் விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஓட்டிங்கில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்து ராணுவத்துக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கமாண்டோக்கள் சந்தேகத்திற்கிடமான பகுதியில் பதுங்கியிருந்தனர். அப்போது அங்கு ஒரு வாகனம் வந்தது. அதனை நிறுத்துமாறு சைகை காட்டப்பட்டது ஆனால் அது வேகமாகச் செல்ல முயன்றது. இதனால் அது தீவிரவாதிகளை ஏற்றிச் சென்ற வாகனம் என்ற சந்தேகத்தின் பேரில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.இப்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. தற்போது போலீசார் இந்த சம்பவத்தை விசாரித்து வருகின்றனர். சிறப்பு விசாரணை குழு ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்கும். . இராணுவம் தனியாக அறிக்கை அளித்துள்ளது.  அதில் அவர்கள் பொதுமக்களின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பாக உயர் மட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் விளக்கம் திருப்தியளிக்கவில்லை எனக் கூறி வெளிநடப்பு செய்துள்ளனர்.

மூலக்கதை