சொகுசு விடுதியில் போதை விருந்து: மாடல் அழகி உள்பட 17 பேர் கைது

தினகரன்  தினகரன்
சொகுசு விடுதியில் போதை விருந்து: மாடல் அழகி உள்பட 17 பேர் கைது

திருவனந்தபுரம்: குமரி-கேரள எல்லை அருகே பூவாரில் சொகுசு விடுதியில் போதை விருந்து நடத்தப்பட்ட சம்பவத்தில் மாடல் அழகி உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை அருகே உள்ளது பூவார். குமரி-கேரள எல்லையை ஒட்டிய இவ்விடம் சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்குள்ள கடற்கரைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும் பல சொகுசு சுற்றுலா விடுதிகளும் உள்ளன. இதுதவிர சிறு சிறு தீவுகளும் அமைந்துள்ளன. இந்த தீவுகளில் உள்ள சுற்றுலா விடுதிக்கு தினமும் ஏராளமானோர் வருகின்றனர். இங்குள்ள காரைக்காடு தீவில் ஒரு சொகுசு விடுதியில் நேற்று போதை விருந்து நடப்பதாக திருவனந்தபுரம் கலால்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து 20 பேர் அடங்கிய அதிகாரிகள் குழு மாறுவேடத்தில் சுற்றுலா பயணிகள் போல சொகுசு விடுதிக்குள் சென்றனர். பின்னர் ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இசை நிகழ்ச்சி என்ற பெயரில் போதை பொருள் சப்ளை செய்யப்படுவதும், அதில் இளம்பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டதையும் நோட்டமிட்டனர். இதையடுத்து கலால்துறையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். இதை தெரிந்து கொண்ட இளம்பெண்கள் உள்பட சிலர் சொகுசு விடுதி பின்புறம் படகு வழியாக கடலில் தப்பி சென்றனர். இதையடுத்து போதை விருந்தில் கலந்து கொண்ட திருவனந்தபுரம் மாடல் அழகி உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், கைதானவர்களில் அக்‌ஷய்மோகன், பீட்டர் ஷாம், அதுல் ஆகியோர்தான் போதை விருந்துக்கு ஏற்பாடு செய்ததும் தெரியவந்தது. சனிக்கிழமை முதல் இந்த போதை விருந்து நடைபெற்று வந்துள்ளது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.1000 முதல் ரூ.3000 வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அனைவரும் இன்ஸ்டாகிராம் மூலம் முன்பதிவு செய்து டிக்கெட் வாங்கியுள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. கைது நடவடிக்கைக்கு பின் அதிகாரிகள் சொகுசு விடுதியில் இருந்து எம்டிஎம்ஏ, எல்எஸ்டி, கஞ்சா உள்பட போதை பொருட்களை கைப்பற்றினர். மேலும் படகு மூலம் கடலில் தப்பி சென்றவர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் குமரி-கேரள எல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை