ஒமிக்ரான் பரவல் எதிரொலி.. இந்தியாவில் மீண்டும் ஒரு கொரோனா அலை வருமா என்பது இன்னும் 2 மாதங்களில் தெளிவாகும் என நிபுணர்கள் தகவல்!!

தினகரன்  தினகரன்
ஒமிக்ரான் பரவல் எதிரொலி.. இந்தியாவில் மீண்டும் ஒரு கொரோனா அலை வருமா என்பது இன்னும் 2 மாதங்களில் தெளிவாகும் என நிபுணர்கள் தகவல்!!

புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 17 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதியாகி உள்ள நிலையில், இந்த புதிய  வைரஸால் நாட்டில் மீண்டும் ஒரு கொரோனா அலை வருமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை வைரஸ், வீரியமிக்கதாகவும், ஆபத்தானதாகவும் இருக்குமென உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதன் காரணமாக ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் பரவுவதை தடுக்க ஒன்றிய அரசு, நாடு முழுவதும் சர்வதேச விமான நிலையங்களில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.  இந்த புதிய கட்டுப்பாடு கடந்த 1ம் தேதி அமலுக்கு வந்த நிலையில்,நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. ஜெய்ப்பூரில் 9 பேருக்கும், புனேவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 7 பேருக்கும், தான்சானியாவில் இருந்து டெல்லி வந்த ஒருவருக்கும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அடுத்தடுத்து ஒமிக்ரான் பாதிப்பு வெளிச்சத்திற்கு வருவதால் கொரோனாவின் அடுத்த அலை ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. எனினும் அது குறித்து தெளிவாக தெரியவர இன்னும் 2 மாதங்கள் வரை ஆகலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மராட்டிய அரசின் கொரோனா தடுப்பு பணிக்குழுவில் இடம் பெற்றுள்ள டாக்டர் ஷஷாங்க் ஜோஷி கூறுகையில், \'ஓமிக்ரான் வைரஸ் தற்போதைக்கு புரியாத புதிராக உள்ளது. நாம் அச்சம் அடைய வேண்டியது இல்லை. விழிப்புடன் இருக்க வேண்டும். இந்தியாவில் ஓமிக்ரான் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்டறிய அடுத்த 6 முதல் 8 வாரங்கள் மிக முக்கியமானவை,\' என்று தெரிவித்தார். 

மூலக்கதை