அவசரகால நிதியை எப்போது பயன்படுத்த வேண்டும்?

தினமலர்  தினமலர்
அவசரகால நிதியை எப்போது பயன்படுத்த வேண்டும்?

எதிர்பாராத நெருக்கடியின் போது அத்தியாவசிய தேவைகளை சமாளிக்க உதவும் அவசரகால நிதியின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்துள்ளனர். குறிப்பாக கொரோனா பாதிப்பால் உண்டான பொருளாதார பாதிப்பு இந்த நிதியின் தேவையை தெளிவாக உணர்த்தியது.

அவரசகால நிதியை உருவாக்கும் வழிகள், எவ்வளவு தொகையை சேமிக்க வேண்டும், இந்த நிதியை எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் போன்ற விஷயங்களும் வல்லுனர்களால் வலியுறுத்தப்படுகின்றன. அதே போலவே அவசரகால நிதியை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்திருப்பது அவசியம்.

வேலையிழப்பு:

எதிர்பாராத தருணங்களில் செலவுகளை சமாளிப்பதற்கு என சேமிக்கப்படும் அவசரகால நிதியை சரியான தருணங்களில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வேலையிழப்பு ஏற்பட்டு மாத வருமானம் நின்று போக்கும் நிலையில் அவசரகால நிதியை நாடலாம். ஊதியம் குறைப்பு போன்ற நிலையிலும் இந்த நிதியை பயன்படுத்தலாம்.

மருத்துவ செலவுகள்:

எதிர்பாராத மருத்துவ செலவுகள் நிச்சயம் பொருளதார நோக்கில் சுமையாக அமையலாம். அதிலும் போதிய மருத்துவ காப்பீடு இல்லாத நேரங்களில் இன்னும் சுமையாக மாறலாம். இது போன்ற தருணங்களில் கைகொடுப்பதற்காகவே அவசரகால நிதி சேமிக்கப்படுகிறது.

வாகன செலவு:

பணி நிமித்தமாக வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கு எதிர்பாராத காரணங்களால் வாகன பழுது ஏற்பட்டு அதிக தொகை தேவைப்பட்டால் அவசரகால நிதியை எடுத்துக்கொள்ளலாம். இதே போல, பழுது காரணமாக வீட்டில் உள்ள முக்கிய உபகரணங்களை மாற்றும் தேவை இருந்தாலும் இந்த நிதியை நாடலாம்.

உண்மையான தேவை:

எதிர்பாராத நெருக்கடி பலவிதங்களில் ஏற்படலாம் என்றாலும், அவை எல்லாவற்றுக்கும் அவசரகால நிதியில் கைவைக்க கூடாது. அந்த நெருக்கடி அத்தியாவசிய தேவை சார்ந்ததாக இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். தவிர்க்க கூடிய செலவுகள், வாழ்வியல் தேவைக்கான செலவுகளுக்கு இந்த நிதிய பயன்படுத்தக்கூடாது.

ஆய்வு அவசியம்:

நிதி நெருக்கடி ஏற்பட்டிருந்தால் அதற்கான காரணங்களை ஆய்வு செய்து, தவிர்க்க கூடிய செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். இதன் வாயிலாக உண்மையான தேவையை எளிதாக அறியலாம். சரியான தருணங்களில் நிதியை பயன்படுத்தும் அதே நேரத்தில் மீண்டும் அந்த நிதியை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

மூலக்கதை