விடுமுறை தினம் என்பதால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம்: பல மணி நேரம் காத்து நின்று தரிசனம்

தினகரன்  தினகரன்
விடுமுறை தினம் என்பதால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம்: பல மணி நேரம் காத்து நின்று தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று 40 ஆயிரம் பக்தர்கள் குவிந்தனர். பல மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சபரிமலையில்  மண்டல கால பூஜைகளுக்காக கோயில் நடை கடந்த 15ம் தேதி திறக்கப்பட்டது.  மறுநாள் முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. தொடக்கத்தில் தினசரி ஆன்லைன்  மூலம் முன்பதிவு செய்யும் 25 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.  பக்தர்களின் கோரிக்கையை ஏற்று எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.  தற்போது தினமும் 50 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால்  அனுமதிக்கப்பட்ட எண்ணிக்ைகயில், பாதிக்கும் குறைவான பக்தர்களே வந்து  கொண்டிருந்தனர்.இந்நிலையில், நேற்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும்,  நேரடி முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளதாலும் காலை முதல் பக்தர்கள் வருகை  அதிகரித்தது . மதியத்திற்குள் 40 ஆயிரம் பக்தர்கள்  குவிந்தனர். இதனால் எங்கு நோக்கினும் ஐயப்ப பக்தர்கள் தலைகளாகவே தென்பட்டன.  கூட்டம் மிகுதியால் 18ம் படி அருகே பக்தர்கள் மணிக்கணக்கில் காத்து  நின்றனர். பின்னர் 18ம் படியேறி சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசனம் செய்தனர். இந்த மண்டல பூஜை சீசனில் நேற்று தான்  மிக அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் குவிந்தனர் என்பது  குறிப்பிடத்தக்கது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால்  பக்தர்கள்  எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை