தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு பேருந்து எரிந்து 33 பேர் பலி: மாலியில் பயங்கரம்

தினகரன்  தினகரன்
தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு பேருந்து எரிந்து 33 பேர் பலி: மாலியில் பயங்கரம்

பமாகோ: மாலியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டினால் பேருந்து தீப்பிடித்து, 33 பயணிகள் கருகி பலியாகினர். மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் ஐஎஸ், அல்-கொய்தா ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்புகள்,  கடந்த 2015 முதல் பொதுமக்கள் மீதும், அரசு படைகள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், மாலியின்  மொப்தி மாகாணத்தில் உள்ள  சொவிரி நகரில் இருந்து பன்டியகராவுக்கு நேற்று பேருந்து ஒன்று சென்றது. இதில், 50க்கும் மேற்பட்ட மக்கள் பயணம் செய்தனர்.  சாங்கோ ஹெரி என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென தீவிரவாதிகள் கும்பலாக வந்து வழிமறித்து, துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதில், பேருந்தின் ஓட்டுனரை கொன்றனர். இதை பார்த்து அலறிய பயணிகள், பேருந்தில் இருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால், பேருந்தின் கதவுகளை மூடிய தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டனர். இதில், பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. 33 பயணிகள் பரிதாபமாக கருகி பலியாகினர். மற்றவர்கள் காயத்துடன் வெளியே குதித்து தப்பினர். தாக்குதல் பற்றி தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு படைகள் அங்கு விரைந்தன. அதற்குள் தீவிரவாதிகள் சென்று விட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரையில் எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

மூலக்கதை