இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்': போலீஸ்காரர் வங்கி கணக்கில் ரூ 80 ஆயிரம் ‛அபேஸ்'

தினமலர்  தினமலர்
இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்: போலீஸ்காரர் வங்கி கணக்கில் ரூ 80 ஆயிரம் ‛அபேஸ்

இந்திய நிகழ்வுகள்தமிழகத்தைச் சேர்ந்தஇரண்டு பேர் கைது

பால்கர்: மஹாராஷ்டிராவில் பால்கர் மாவட்டம் ஆமதாபாத் சாலையில் சமீபத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது தமிழகத்தில் இருந்து 'கன்டெய்னர்' லாரியில் கடத்தி வந்த 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 21 ஆயிரத்து 18 கிலோ மாட்டிறைச்சியை பறிமுதல் செய்தனர். லாரியில் இருந்த அரியலுாரை சேர்ந்த கொலிஞ்சிநாத் ராஜேந்திரன், 37, மற்றும் ரஞ்சித் குமார், 36, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மது பாட்டில் மாயம்பெண் ஏட்டு மீது வழக்கு

முசாபர்நகர்: உத்தர பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டம் கைரானா போலீசார் 12 வழக்குகளில் கைப்பற்றிய மதுபாட்டில்கள் அடங்கிய 578 பெட்டிகள், பெண் ஏட்டு தரேஷ் சர்மா கட்டுப்பாட்டில் இருந்தன. தற்போது பணியிட மாற்றம் காரணமாக மற்றொருவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தபோது, 578 பெட்டிகளும் மாயமானது தெரியவந்தது. இதுதொடர்பாக ஏட்டு தரேஷ் ஷர்மா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமி கொலைதந்தை கைது

தானே: மஹாராஷ்டிராவின் தானேவில் உள்ள மும்பாராவை சேர்ந்தவர் அனிஷ் மால்தார், 33. கூலித்தொழிலாளியான இவருக்கு, நேற்று முன்தினம் இரவு மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர், தன் 7 வயது மகளின் கழுத்தை நெரித்து கொன்றார். அனிஷ் மால்தாரை போலீசார் கைது செய்தனர்.

பரம்வீர் சிங் மீதுகுற்றப்பத்திரிகை

மும்பை: மஹாராஷ்டிராவின் முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் உள்ளிட்ட சில அதிகாரிகள் தன்னை மிரட்டி பணம் பறித்ததாக, தொழிலதிபர் பிமல் அகர்வால் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து பரம்வீர் சிங் சமீபத்தில் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் பரம்வீர் சிங், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்ட போலீஸ் எஸ்.ஐ., சச்சின் வாஸ் உட்பட நால்வர் மீது, மும்பை நீதிமன்றத்தில் போலீசார் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்

விஷ பழங்கள் சாப்பிட்ட 49 பேர் பாதிப்பு

சியோனி--மத்திய பிரதேசத்தில் விஷத்தன்மை உடைய பழங்களை சாப்பிட்ட 49 மாணவர்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டது.

மத்திய பிரதேசத்தில் சியோனி மாவட்டம் பர்காட்டில் அரசு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது.இங்கு பயிலும் 49 மாணவர்கள் நேற்று முன்தினம் பள்ளிக்கு அருகில் உள்ள ரத்தன்ஜோட் மரத்தில் இருந்த பழங்களை பறித்து சாப்பிட்டனர்; இவை விஷத்தன்மை உடையவை என கூறப்படுகிறது.இதனால் வீட்டிற்கு வந்தபின் அவர்கள் வாந்தி மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டனர். உடனடியாக அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 47 பேர் வீடு திரும்பிய நிலையில், இருவர் மேல் சிகிச்சைக்காக சியோனி மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.பர்காட்டில் உள்ள மற்றொரு துவக்கப் பள்ளியில் 13 மாணவர்கள் சமீபத்தில் ரத்தன்ஜோட் பழங்களை சாப்பிட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தனர்.

விடுமுறைக்கு அனுமதி தராததால் உயரதிகாரிகள் சுட்டுக் கொலை

அகர்தாலா-திரிபுரா மாநிலத்தில் விடுமுறைக்கு அனுமதி தராத உயர் அதிகாரிகள் இருவரை, போலீஸ்காரர் சுட்டுக் கொன்றார். வட கிழக்கு மாநிலமான திரிபுராவில் முதல்வர் பிப்லப் குமார் தேவ் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள செபஹிஜலா மாவட்டத்தில் உள்ள திரிபுரா மாநில போலீஸ் முகாமில்பணியாற்றியவர் சுகந்த தாஸ். இவர், சக அதிகாரிகளிடம் விடுமுறை கேட்டுள்ளார். ஆனால் உயர் அதிகாரிகளான சுபேதார் மர்க்கா சிங் ஜமாதியா, நயிப் சுபேதார் கிரண் ஜமாதியா ஆகிய இருவரும், சுகந்த தாஸை பணியில் இருந்து விடுவிக்கவில்லை. இதுகுறித்து நேற்று வாக்குவாதம் நடந்தது. அப்போது, தான் வைத்திருந்த துப்பாக்கியால் மர்க்கா சிங், கிரண் ஆகிய இருவரையும் சுகந்த தாஸ் சுட்டுக் கொன்றார்.இதையடுத்து போலீசில் சரண் அடைந்தார். விசாரணை நடக்கிறது.

தமிழக நிகழ்வுகள்


மாணவியை திருமணம் செய்தவர் உட்பட மூவர் போக்சோவில் கைது
பாலக்கோடு: சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே, 15 வயது பள்ளி மாணவி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், அதே பகுதியை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், உறவினர் ஒருவரை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். இதையடுத்து தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த திட்டம்பட்டியை சேர்ந்த கார்த்திக், 24, என்பவருக்கும், மாணவிக்கும் கடந்த, 15ல், வீட்டில் வைத்து திருமணம் செய்து வைத்தனர். இது குறித்து, அந்த மாணவி குழந்தை தடுப்பு பிரிவு, மகேந்திரமங்கலம் போலீசாருக்கு கடந்த, 21ல், தகவல் அளித்தார். அதிகாரிகள், போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மாணவிக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ வழக்கின் கீழ் கார்த்திக், அவரது தாய் செல்வி, 42. மாணவியின் தாய் ஆகிய மூவரை மகேந்திரமங்லகம் போலீசார் கைது செய்தனர்.

கட்டிலில் இருந்து விழுந்து மூதாட்டி சாவு

அரூர்: அரூர் அடுத்த நரிப்பள்ளியை சேர்ந்தவர் பெரியம்மா, 70, இவர் கடந்த, 28ல் இரவு, 7:00 மணிக்கு வீட்டில் மழை நீரில் பொருட்கள் நனையாமல் இருக்க, அதனை எடுப்பதற்காக கட்டிலில் இருந்து இறங்கிய போது, கீழே விழுந்து காயமடைந்தார். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். கோட்டப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

ஹான்ஸ், குட்கா பறிமுதல்: 3 பேர் கைது
ஊட்டி: கர்நாடகா மாநிலம் குண்டல்பேட் பகுதியில் இருந்து குன்னூர் வழியாக பொள்ளாச்சிக்கு கடத்த முயன்ற ரூபாய் 8.35 லட்சம் மதிப்பிலான ஹான்ஸ், குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை தடுப்பு மீது அரசு பஸ் மோதல்: 15 பேர் படுகாயம்
ஆற்காடு: ஆற்காடு அருகே, சாலை தடுப்பு மீது அரசு பஸ் மோதியதில் 15 பேர் படுகாயமடைந்தனர்.
வேலுாரில் இருந்து காஞ்சிபுரத்திற்கு அரசு பஸ் இன்று (டிச.,4) காலை புறப்பட்டது. ஆற்காட்டை சேர்ந்த டிரைவர் ஆறுமுகம், 45, பஸ்சை ஓட்டிச் சென்றார். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த வேப்பூர் பைபாஸ் சாலையில் சென்ற போது, எதிரே வந்த லாரியின் மீது மோதாமல் இருக்க வலது புறமாக பஸ்சை திருப்பிய போது, நிலைதடுமாறி சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதியது.
இந்த விபத்தில் பஸ் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதில் பஸ் டிரைவர் ஆறுமுகம், பயணிகள் உள்ளிட்ட 15 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் ஆற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவ்விபத்து குறித்து ஆற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

போலீஸ்காரர் வங்கிக் கணக்கில் இருந்து ரூ 80 ஆயிரம் அபேஸ்
வேலூர்: வேலூரில், போலீஸ்காரர் நீண்ட நாட்களாக பயன்படுத்தாத வங்கி கணக்கிலிருந்து, 80 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்தவர்களை பிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், பாகாயத்தை சேர்ந்த பிரபு, 30, வேலூரில் ரிசர்வ் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர், வேலூர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில், 2015ல் சேமிப்பு கணக்கு வைத்திருந்தார். நீண்ட நாட்களாக கணக்கை அவர் பரிவர்த்தனை செய்யவில்லை. கடந்த மாதம், 7ல், அவரது மொபைலுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், உங்கள் வங்கி கணக்கு காலாவதியாகி விட்டது. அதை புதுப்பிக்க நாங்கள் அனுப்பும் லிங்க்கில் குறிப்பிட்டுள்ள விபரங்களை தெரிவிக்கும்படி இருந்தது. இதை நம்பி அவர், அனைத்து விபரங்களையும் அதில் பதிவு செய்தார். கடந்த மாதம், 20ல் அவரது வங்கி கணக்கில், 80 ஆயிரம் ரூபாய் டிபாசிட் செய்துள்ளதாக குறுந்தகவல் வந்துள்ளது.

சிறிது நேரத்தில் அந்த பணம் எடுக்கப்பட்டதாக மற்றொரு குறுந்தகவல் வந்துள்ளது. இதனால் குழப்பமடைந்த அவர் வங்கி சென்று விசாரித்தார். அதில், நீங்கள் அரசு ஊழியராக இருப்பதால், ஆன்லைனில் அனுப்பிய கடன் விண்ணப்பம் உடனே ஏற்றுக் கொள்ளப்பட்டு, உங்களுக்கு ஜாமின் இல்லாமல், 80 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான தொகை தங்கள் சம்பளத்தில் மாதந்தோறும் பிடித்தம் செய்து கொள்ளப்படும் என்று கூறியுள்ளனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதையறிந்த பிரபு, வேலூர் சைபர் க்ரைம் பிரிவு போலீசில் நேற்று புகார் செய்தார். இது குறித்து சைபர் க்ரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் அபர்ணா கூறுகையில், ''வங்கியிலிருந்து பேசுவது போல, மொபைல் போனில் யாராவது பேசி கணக்கு விபரங்களை கேட்டால் அவற்றை பதிவு செய்ய வேண்டாம். நீண்ட நாட்களாக பயன்படுத்தாக வங்கி கணக்கு விபரங்களை எப்படியோ தெரிந்து கொள்ளும் மர்ம நபர்கள், தற்போது இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்,'' என்றார்.

முகக்கவசம் அணியாததால் பஸ்ஸில் குடுமிப்பிடி சண்டை

ஈரோடு: அரசு பஸ்சில் முக கவசம் அணியாத பெண்ணுக்கும், அணிந்த பெண்ணுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம், குடுமிப்பிடி சண்டையில் தொடங்கி, போலீஸ் சமாதானத்தில் முடிந்தது.
ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து பவானிக்கு, நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு அரசு டவுன் பஸ் (தடம் எண்-?) கிளம்பியது. முக கவசம் அணியாமல் ஏறிய ஒரு பெண், முக கவசம் அணிந்த பெண் அருகில் அமர்ந்தார். முக கவசம் அணியுமாறு அந்தப்பெண் கூற, இவர் மறுத்தார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் குடுமிப்பிடி சண்டையானது. அப்போது பஸ் வீரப்பன்சத்திரத்தை நெருங்கியிருந்தது. இரு பெண்களையும் இறங்கச் சொல்லி கண்டக்டர் சமாதானம் செய்ய முயன்றார். மற்ற பயணிகளும் இறங்கி சமாதானம் செய்தும், இருவரும் தகாத வார்த்தை பேசிக்கொள்வது தொடர்ந்தது. இதனால் வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு, கண்டக்டர் தகவல் தெரிவித்தார். போலீசார் முக கவசம் அணியாத பெண்ணை எச்சரித்தனர். அறிவுரை கூறி, மீண்டும் பஸ் ஏற்றி அனுப்பினர். பெண்களின் குடுமிப்பிடி சண்டையால் அரை மணி நேரம் தாமதமாக பஸ் கிளம்பி சென்றது.

வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன், ரூ.50,000 அபேஸ்

சேலம்: வீட்டின் பூட்டை உடைத்து, 12 பவுன் நகைகள், 50 ஆயிரம் ரூபாயை, மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

சேலம், சூரமங்கலத்தை சேர்ந்த, பழனிசாமி மனைவி ராஜேஸ்வரி, 56; கூலி வேலை செய்து வரும் இவர், கடந்த, 1 மாலை, 5:30 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு, கருப்பூர், வெத்தலைக்காரனூரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு வீடு திறந்து கிடப்பதாக, அப்பகுதியை சேர்ந்த சிலர், ராஜேஸ்வரிக்கு தகவல் கொடுத்தனர்.

அவர் நள்ளிரவில் வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 12 பவுன் நகைகள், 50 ஆயிரம் ரூபாய் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

உலக நிகழ்வுகள்

விர்ஜின் தீவுகளில் 3 இந்தியர்கள் கைது

வாஷிங்டன்-அமெரிக்காவின் விர்ஜின் தீவுகளில் சட்டவிரோதமாக புகுந்த மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அமெரிக்காவின் விர்ஜின் தீவுகளில் உள்ள விமான நிலையத்தில் இருந்து, சமீபத்தில் புளோரிடா மாகாணம் போர்ட் லாடர்டேல் செல்லும் விமானத்தில் பயணிக்க இருந்த மூன்று இந்தியர்களின் ஆவணங்கள் பரிசோதனைக்கு உள்ளாயின.கிருஷ்ணாபென் படேல், 25, நிகுஞ்ச்குமார் படேல், 27 மற்றும் அசோக்குமார் படேல், 39, ஆகிய அவர்கள் தாக்கல் செய்த 'டிரைவிங் லைசென்ஸ்' உள்ளிட்ட ஆவணங்கள் போலி என தெரியவந்தது.இதையடுத்து சட்டவிரோதமாக குடியேற முயன்றதாக மூவரும் கைதாயினர். விசாரணையில் 21019ல் கலிபோர்னியா சென்ற மூவரும் சட்டவிரோதமாக நாட்டிற்குள் புகுந்த குற்றச்சாட்டில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டவர்கள் என்றும் தெரியவந்தது.'மீண்டும் அதே குற்றத்தில் கைதான அவர்களுக்கு தலா 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பின் நாடு கடத்தப்படுவர்' என, அமெரிக்க வழக்கறிஞர் ஒருவர் கூறினார்.

இந்திய நிகழ்வுகள்தமிழகத்தைச் சேர்ந்தஇரண்டு பேர் கைதுபால்கர்: மஹாராஷ்டிராவில் பால்கர் மாவட்டம் ஆமதாபாத் சாலையில் சமீபத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை