லேக்கர், கும்ப்ளே சாதனை சமன்: 10 விக்கெட் வீழ்த்தி அசத்திய அஜாஸ்

தினகரன்  தினகரன்
லேக்கர், கும்ப்ளே சாதனை சமன்: 10 விக்கெட் வீழ்த்தி அசத்திய அஜாஸ்

இந்திய அணி முதல் இன்னிங்சில்  10 விக்கெட்டையும் வீழ்த்திய நியூசி. ஸ்பின்னர் அஜாஸ் படேல், டெஸ்ட் வரலாற்றில் இந்த சாதனையை நிகழ்த்தும் 3வது வீரர் என்ற பெருமையை பெற்றார். 47.5 ஓவர் வீசிய அவர், அதில் 12 மெய்டன் உள்பட 119 ரன் விட்டுக்கொடுத்து இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அனைவரையும் ஆட்டமிழக்கச் செய்தார்.முன்னதாக  இங்கிலாந்து வீரர் ஜிம் லேக்கர்  1956ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்டின் 2வது இன்னிங்சில் 10 விக்கெட்டையும் வீழ்த்தினார். அதே டெஸ்டின் முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டை வீழ்த்தியிருந்த அவர், ஒரே டெஸ்ட்டில் அதிக விக்கெட் (19) வீழ்த்திய வீரர்கள் பட்டியலிலும் முதலிடத்தில் இருக்கிறார்.இந்திய சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே 1999ல் பாகிஸ்தானுக்கு எதிராக டெல்லியில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் 10 விக்கெட்டையும் அள்ளினார். முதல் இன்னிங்சில் அவர் 4 விக்கெட் எடுத்திருந்தார். அஜாஸ் படேல் மும்பையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  8 வயது சிறுவனாக இருந்தபோது அவரது பெற்றோர் நியூசிலாந்தில் குடியேறினர். 2018ல் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் அறிமுகமான அஜாஸ், தனது 10வது டெஸ்ட் போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க 10 விக்கெட் சாதனையை வசப்படுத்தியுள்ளார்.சிறந்த பந்துவீச்சு* அஜாஸ் 119 ரன்னுக்கு 10 விக்கெட் கைப்பற்றியது, டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரரின் சிறந்த பந்துவீச்சாகவும் அமைந்தது. முன்னதாக 1985ல் ரிச்சர்டு ஹாட்லி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 51 ரன் விட்டுக்கொடுத்து 9 விக்கெட் வீழ்த்திய சாதனையை அஜாஸ் நேற்று முறியடித்தார்.* இந்தியாவுக்கு எதிராக  சுழற்பந்துவீச்சாளர்களின் விக்கெட் வேட்டையிலும் அஜாஸ் முதலிடம் பிடித்துள்ளார். முன்னதாக, ஆஸி. ஸ்பின்னர் நாதன் லயன் 2017ல் 50 ரன் விட்டுக்கொடுத்து 8 விக்கெட், ஜாசன் கிரெஜா 2008ல் 215 ரன் விட்டுக்கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.* மும்பை, வாங்கடே அரங்கில்  குறைந்தபட்ச ஸ்கோரை நியூசி. நேற்று பதிவு செய்தது. இதற்கு முன்பு  2004ல் ஆஸி. 93 ரன்னிலும், 2006ல் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 100 ரன்னிலும், 1981ல் இங்கிலாந்து 102 ரன்னிலும், 2004ல் ஆஸி. 104 ரன்னிலும் சுருண்டுள்ளன.* மும்பையில் நேற்று 62 ரன்னுக்கு சுருண்டது இந்தியாவுக்கு எதிராக நியூசி.யின் குறைந்தபட்ச டெஸ்ட் ஸ்கோராக அமைந்தது. இதற்கு முன் ஹாமில்டன் டெஸ்டில் (2001) 94 ரன்னிலும், வெலிங்டன் டெஸ்டில் (1981) 100 ரன்னிலும், ஆக்லாந்து டெஸ்டில் (1968) 101 ரன்னிலும் ஆல் அவுட்டாகி உள்ளது.* டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்த அணிகள் பட்டியலிலும் நியூசி. முதலிடம் பிடித்துள்ளது. நியூசிலாந்து (மும்பை/2021) 62 ரன்; தென் ஆப்ரிக்கா (நாக்பூர்/2015) 79 ரன்; இங்கிலாந்து (அகமதாபாத்/2021) 81 ரன்; இலங்கை (சண்டிகர்/1990)  82 ரன் எடுத்துள்ளன.* நியூசி. எடுத்த 62 ரன், இந்தியாவில் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோராகவும் அமைந்தது. இதற்கு முன் வெ.இண்டீஸ் (டெல்லி/1987) 75 ரன்னிலும், தென் ஆப்ரிக்கா (அகமதாபாத்/2008) 76 ரன்னிலும் சுருண்டுள்ளன.

மூலக்கதை