எல்லையை சுற்றி முற்றுகையிட்டு அச்சுறுத்தல் உக்ரைன் மீது படை எடுக்க 1.75 லட்சம் வீரர்கள் குவிப்பு: ரஷ்யா அதிரடி; அமெரிக்கா பதிலடி

தினகரன்  தினகரன்
எல்லையை சுற்றி முற்றுகையிட்டு அச்சுறுத்தல் உக்ரைன் மீது படை எடுக்க 1.75 லட்சம் வீரர்கள் குவிப்பு: ரஷ்யா அதிரடி; அமெரிக்கா பதிலடி

வாஷிங்டன்: உக்ரைன் மீது அடுத்தாண்டு தொடக்கத்தில் ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்யா திட்டமிட்டு வருவதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ‘நேட்டோ’ என அழைக்கப்படும், ‘வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு’ கடந்த 1949ம் ஆண்டு பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் தொடங்கப்பட்டது. இதில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உட்பட உலகின் பலம் வாய்ந்த நாடுகள் இடம் பெற்றுள்ளன.  நட்பு நாடுகளின் மீது தாக்குதல் நடத்தும் எதிரி நாடுகளின் மீது கூட்டாக தாக்குதல் நடத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்த அமைப்பில் தற்போது உக்ரைன் சேர முயற்சி செய்து வருகிறது. இதற்கு அமெரிக்காவும் ஆதரவு தெரிவிக்கிறது. ஆனால், ரஷ்யா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் ரஷ்ய அதிபர் புடின் தீவிரமாக எடுத்து வருகிறார். அடுத்தாண்டு தொடக்கத்தில் இந்த தாக்குதல் நடக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க உளவுத்துறை அளித்துள்ள அறிக்கையில், `உக்ரைன் மீது 1.75 லட்சம் வீரர்கள் கொண்ட படையுடன் தாக்குதல் நடத்த ரஷ்யா தயாராகி வருகிறது. இதற்காக, அந்நாட்டின் எல்லையை சுற்றி நவீன ஆயுதங்கள், தளவாடங்களுடன் முற்றுகையிட்டுள்ளது,’ என்று கூறப்பட்டுள்ளது. உக்ரைனை நேட்டோவில் சேர்க்கும் முடிவை கைவிடும்படி அமெரிக்க அதிபர் பைடனிடம், அடுத்த தொலைபேசி பேச்சின்போது வலியுறுத்த புடின் திட்டமிட்டுள்ளார். ஆனால், ‘உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக இருந்தால், ரஷ்யா மீது அமெரிக்க எடுக்கும் நடவடிக்கைகள் மிகவும் கடுமையாக இருக்கும்,’ என்று பைடன் எச்சரித்துள்ளார்.உக்ரைன் முன்பு மாதிரி இல்லை ஜாக்கிரதை...அமெரிக்க உளவுத்துறை மேலும் கூறுகையில், `உக்ரைன் மீது உண்மையிலேயே தாக்குதல் நடத்துவதாக இருந்தால், அந்நாட்டு படைகள் முன்பு போல் இல்லை என்பதையும், தற்போது அவர்களின் ராணுவம் ஆயுதங்களுடன் தயார் நிலையில் உள்ளது என்பதையும் புடின் உணர வேண்டும். மேலும், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால் மேற்கத்திய நாடுகள் விதிக்கும் பொருளாதார தடைகளால் ரஷ்யாவின் பொருளாதாரம் சீரழிந்து விடும்,’ என்று தெரிவித்துள்ளது.

மூலக்கதை