மகாராஷ்டிரா, குஜராத்திலும் பரவியது மேலும் 2 பேருக்கு ஒமிக்ரான் உறுதி: வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மாயமானதால் தொற்று பரவும் அபாயம்

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிரா, குஜராத்திலும் பரவியது மேலும் 2 பேருக்கு ஒமிக்ரான் உறுதி: வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மாயமானதால் தொற்று பரவும் அபாயம்

புதுடெல்லி: தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள், ஒமிக்ரான் வைரஸ் பாதிப்புடனும், கொரோனா தொற்றுடனும் தலைமறைவாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவர்களால் நாடு முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்தியாவில் மேலும் 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது நேற்று உறுதியாகி உள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் கொரோனா வைரஸ், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரக்கூடிய விமானப் பயணிகள் மூலமாக மட்டுமே இந்தியாவில் நுழைய வாய்ப்புள்ளது. இதனால், நாடு முழுவதும் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட ஒமிக்ரான் வைரஸ் பரவிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இவர்களில் தொற்று பாதிப்பு இருப்பவர்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். ஒமிக்ரான் வகை என உறுதியானதால் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வர வேண்டுமென ஒன்றிய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கிடையே முதல் முறையாக, பெங்களூருவில் கடந்த வியாழக்கிழமை தென் ஆப்ரிக்காவை சேர்ந்த 66 வயது முதியவர் உட்பட 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் உறுதியானது. ஆனால், இது உறுதியாகும் முன்பாகவே அந்த முதியவர் துபாய் வழியாக தென் ஆப்ரிக்கா சென்று விட்டார். அவருடன் கொரோனா நெகட்டிவ் என சான்றிதழ் கொடுத்தவர்கள் மொத்தம் 57 பேர். அவர்களை மீண்டும் பரிசோதிப்பதற்காக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த போதுதான், அதில் 10 பேர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்துள்ளது. 10 பேரின் முகவரி தவறு, செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் 10 பேரை கண்டறிய முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர். இதே போல,் உபி.யின் மீரட் நகரில் 297 வெளிநாட்டு பயணிகளில் 13 பேர் தலைமறைவாகி உள்ளனர். இவர்களில் 7 பேர் தென் ஆப்ரிக்காவில் இருந்து வந்தவர்கள். இதேபோல் ஆப்ரிக்காவில் இருந்து ஆந்திரா திரும்பிய 60 பேரில் 30 பேர் மாயமாகி உள்ளனர். இவர்களை கண்டறிய முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர். இதுபோல், போலி முகவரி கொடுத்தும், போனை சுவிட்ச் ஆப் செய்தும் வைப்பவர்களால் இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே, இந்தியாவில் மேலும் 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று நேற்று உறுதியாகி உள்ளது. குஜராத்தின் ஜாம்நகரை சேர்ந்த 71 வயது முதியவர் ஜிம்பாப்வேயில் இருந்து நாடு திரும்பி உள்ளார். விமான நிலையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று கடந்த 2ம் தேதி உறுதியானது. அதைத் தொடர்ந்து மரபணு சோதனையில் ஒமிக்ரான் வைரஸ் இருப்பது நேற்று தெரியவந்துள்ளது. உடனடியாக அந்த முதியவர் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதே போல, தென் ஆப்ரிக்காவிலிருந்து துபாய் வழியாக மும்பை திரும்பிய 33 வயது நபருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒமிக்ரான் வகை வைரஸ் பரவல் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.சிகிச்சை பெறுவோர் 1 லட்சத்துக்கு கீழ் சரிவு * இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா தொற்றால் 8,603 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 3.46 கோடி.* கடந்த 24 மணி நேரத்தில் 415 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி 4.70 லட்சம்.* சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் கீழ் குறைந்து 99,974 ஆக பதிவாகி உள்ளது.பூஸ்டர் தடுப்பூசி குறித்து அதிக ஆய்வுஒமிக்ரான் வைரஸ் பீதி அதிகரித்து வரும் நிலையில், தற்போதுள்ள கொரோனா தடுப்பூசிகளின் வீரியம் குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும் எனவும், புதிய வகை வைரசுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தேவை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் சுகாதாரத் துறைக்கான நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்து, அறிக்கை சமர்பித்துள்ளது. இதற்கிடையே, பூஸ்டர் தடுப்பூசியை காட்டிலும் நாடு முழுவதும் அனைவருக்கும் முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கே முன்னுரிமை தர வேண்டும் என முன்னணி ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

மூலக்கதை