அஷ்வின் அசத்தல் பந்துவீச்சு * 62 ரன்னுக்கு சுருண்டது நியூசி., | டிசம்பர் 04, 2021

தினமலர்  தினமலர்
அஷ்வின் அசத்தல் பந்துவீச்சு * 62 ரன்னுக்கு சுருண்டது நியூசி., | டிசம்பர் 04, 2021

மும்பை: மும்பை டெஸ்டில் அஷ்வின் உள்ளிட்ட இந்திய பவுலர்கள் அசத்த, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 62 ரன்னுக்கு சுருண்டது. 

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆக, தொடர் 0–0 என சமனில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது.

மழை பாதித்த முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 221 ரன் எடுத்திருந்தது. மயங்க் அகர்வால் (120), சகா (25) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் அஜாஸ் படேல் 4 விக்கெட் சாய்த்தார். 

அக்சர் அரைசதம்

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து அசத்தினார் அஜாஸ். இவரது சுழலில் சகா (27), அஷ்வின் (0) வெளியேறினர். மயங்க் அகர்வால் 150 ரன் எடுத்து அவுட்டானார். அக்சர் படேல் 52 ரன் எடுத்தார். ஜெயந்த் யாதவ் (12), சிராஜும், அஜாஸ் சுழலில் சரிந்தனர். இந்திய அணி முதல் இன்னிங்சில் 325 ரன் எடுத்தது. 

நியூசிலாந்து சார்பில் அஜாஸ் படேல் 10 விக்கெட் வீழ்த்தி சாதித்தார்.

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் ‘டாப் ஆர்டரை’ முகமது சிராஜ் சிதறடித்தார். இவரது ‘வேகத்தில்’ வில்லியம் யங் (4), டாம் லதாம் (10), ராஸ் டெய்லர் (1) வெளியேறினர். மறுபக்கம் சுழலில் மிரட்டிய அஷ்வினிடம், நிக்கோல்ஸ் (7), பிளண்டல் (8), டிம் சவுத்தீ (0) சரண் அடைந்தனர். கடைசியில் ஜேமிசன் (17) அவுட்டாக நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 62 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் அஷ்வின் 4, அக்சர் படேல் 3, சிராஜ் 3 விக்கெட் சாய்த்தனர். 

பின் களமிறங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன் எடுத்து, 278 ரன் முன்னிலை பெற்றிருந்தது. 

மூலக்கதை