தென் ஆப்ரிக்க தொடரில் மாற்றம்: பி.சி.சி.ஐ., அறிவிப்பு | டிசம்பர் 04, 2021

தினமலர்  தினமலர்
தென் ஆப்ரிக்க தொடரில் மாற்றம்: பி.சி.சி.ஐ., அறிவிப்பு | டிசம்பர் 04, 2021

கோல்கட்டா: இந்திய அணியின் தென் ஆப்ரிக்க பயணம் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ‘டி–20’ தொடர் பின்னர் நடத்தப்படும் என்று பி.சி.சி.ஐ., சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்க மண்ணில் இந்திய அணி, மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள், நான்கு ‘டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருந்தது. இதற்காக வரும் டிச. 9ல் இந்திய அணியினர் தென் ஆப்ரிக்கா புறப்பட இருந்தனர். ஆனால் தென் ஆப்ரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் திடீரென பரவி வரும் ‘ஒமைக்ரான்’ என்ற புது வகை கொரோனா காரணமாக உலகம் முழுவதும் மீண்டும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இத்தொடர் நடக்குமா என சந்தேகம் எழுந்தது.

 

இந்நிலையில் இந்தியா, தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் போர்டுகள் இணைந்து ஒருமனதாக சில முடிவுகள் எடுத்துள்ளன. இதன்படி, இந்திய அணியின் தென் ஆப்ரிக்க பயணம் ஒரு வார காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் டிச. 17ல் துவங்க இருந்த முதல் டெஸ்ட் டிச. 26ல் துவங்கவுள்ளது. திட்டமிட்டபடி மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் நடத்தப்படும். ஆனால் நான்கு போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரை பின்னர் நடத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. மாற்றி அமைக்கப்பட்ட அட்டவணையை தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டு விரைவில் அறிவிக்கும்.

 

இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலர் ஜெய் ஷா கூறுகையில், ‘‘திட்டமிட்டபடி டெஸ்ட், ஒருநாள் தொடர் நடத்தப்படும். ‘டி–20’ தொடரை மட்டும் பின்னர் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியின் தென் ஆப்ரிக்க பயணம் ஒரு வாரம் தாமதமாகும் என்பதால், முதல் டெஸ்ட் வரும் டிச. 26ல் துவங்கும். இதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும்,’’ என்றார்.

மூலக்கதை