கங்குலி அணி ஏமாற்றம்: ஒரு ரன்னில் தோல்வி | டிசம்பர் 04, 2021

தினமலர்  தினமலர்
கங்குலி அணி ஏமாற்றம்: ஒரு ரன்னில் தோல்வி | டிசம்பர் 04, 2021

கோல்கட்டா: பி.சி.சி.ஐ., பிரசிடென்ட் லெவன் அணிக்கு எதிரான கண்காட்சி கிரிக்கெட் போட்டியில், ஜெய் ஷா தலைமையிலான செக்ரெட்டரி லெவன் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது.

கோல்கட்டாவில், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதற்காக கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் கண்காட்சி கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. தலா 15 ஓவர் கொண்ட இப்போட்டியில் பி.சி.சி.ஐ., தலைவர் சவுரவ் கங்குலி தலைமையிலான பிரசிடென்ட் லெவன் அணி, பி.சி.சி.ஐ., செயலர் ஜெய் ஷா வழிநடத்திய செகரெட்டரி லெவன் அணியை எதிர்கொண்டது.

 

‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த செகரெட்டரி லெவன் அணிக்கு ஜெய்தேவ் யாதவ் (40* ‘ரிட்டயர்டு ஹர்ட்’), அருண் துமால் (36) கைகொடுக்க, 15 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 128 ரன் எடுத்தது. ஜெய் ஷா (10) அவுட்டாகாமல் இருந்தார். பிரசிடென்ட் லெவன் அணி சார்பில் கங்குலி ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

 

பின் களமிறங்கிய பிரசிடென்ட் லெவன் அணிக்கு கேப்டன் கங்குலி, 20 பந்தில் 35 ரன் (2 சிக்சர், 4 பவுண்டரி) எடுத்து ‘ரிட்டயர்டு ஹர்ட்’ ஆனார். அசார் (2), அவிஷேக் டால்மியா (13) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்ற, பிரசிடென்ட் லெவன் அணி 15 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 127 ரன் மட்டும் எடுத்து அதிர்ச்சி தோல்வியடைந்தது. செகரெட்டரி லெவன் அணி சார்பில் ஜெய் ஷா 3 விக்கெட் சாய்த்தார்.

மூலக்கதை