இன்னும் எத்தனை நாள்தான் அமைதியாக இருப்பது 3 மாதம் சம்பளம் இல்லாமல் வேலை செய்து வருகிறோம்: பாக். தூதரக அதிகாரி டிவிட்டால் பரபரப்பு

தினகரன்  தினகரன்
இன்னும் எத்தனை நாள்தான் அமைதியாக இருப்பது 3 மாதம் சம்பளம் இல்லாமல் வேலை செய்து வருகிறோம்: பாக். தூதரக அதிகாரி டிவிட்டால் பரபரப்பு

பெல்கிரேட்:  கடந்த 3 மாதங்களாக சம்பளம் இல்லாமல் வேலை செய்து வந்த பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள், பிரதமர் இம்ரான்கானை நேற்று வாட்டி வதைத்து விட்டனர். தீவிரவாதத்தின் மீது செலுத்தும் கவனத்தை, தனது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் மீது பாகிஸ்தான் காட்டுவது இல்லை. இதனால், அந்த நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து பண வீக்கம் அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள தனது நாட்டு தூதரக அதிகாரிகளுக்கு கூட சம்பளம் வழங்க முடியாத நிலையில், பிரதமர் இம்ரான் கான் இருக்கும் அவலம், உலகளவில் நேற்று வெட்ட வெளிச்சமாகி விட்டது. செர்பியாவில் பாகிஸ்தான் தூதரகம் செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றும் அதிகாரி ஒருவர்  பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் நேற்று வௌியிட்ட  பதிவில், ‘முந்தைய சாதனைகள் அனைத்தையும் பணவீக்கம்  முறியடித்து விட்டது.  அரசு ஊழியர்களான நாங்கள் இன்னும் எத்தனை  நாட்களுக்குதான்  அமைதியாக இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்? பிரதமர் இம்ரான்கான் அவர்களே,  உங்களுக்காக நாங்கள் கடந்த 3 மாதங்களாக சம்பளம் இல்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறோம். கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் எங்கள் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  இதுதான் புதிய பாகிஸ்தானா?’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த டிவிட்டர் பதிவுடன் இம்ரான் கானை கிண்டல் செய்து, இசை வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘சோப்பு விலை உயர்ந்து விட்டால், அதை பயன்படுத்தாதே... கோதுமை விலை குறைந்து விட்டால் அதை சாப்பிடாதே...’ என்ற வாசகத்துடன், இம்ரான் கானை கிண்டல் செய்து இசையுடன், பாட்டும் வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இந்த பதிவுகள் வெளியானதால், ஒரு சில நிமிடங்களில் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.  ஆனால், தனது நாட்டின் டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு, விஷமிகளால் இந்த பதிவு வெளியிடப்பட்டு இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை